Breaking News
விசா முறைகேட்டில் இந்திய மாணவர்கள் கைது: போலி பல்கலைக்கழகம் என தெரியாமல் சேர்ந்துவிட்டனர் வக்கீல்கள் வாதம்

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ‘எப் 1’ விசா வழங்கப்படுகிறது. இப்படி ‘எப் 1’ விசா பெறும் மாணவர்கள், படிப்பு முடிந்ததும் அமெரிக்காவிலேயே பணிபுரிவதற்காக பணி விசாவுக்காக காத்திருப்பது உண்டு.

அந்த வகையில் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர்.

ஆனால் இந்த பார்மிங்டன் பல்கலைக்கழகம், விசா மோசடிகளையும், குடியேற்ற விதி மீறல்களையும் கண்டறிவதற்காக உள்நாட்டு பாதுகாப்புத்துறையால் போலியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரகசிய நடவடிக்கை குறித்து அறியாமல், இந்தியர்கள் 8 பேர், வெளிநாட்டு மாணவர்கள் 600 பேரை அமெரிக்காவிலேயே தங்கவைப்பதற்காக பார்மிங்டன் பல்கலைக்கழகத்தை அணுகினர்.

இதையடுத்து, அவர்கள் விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக 8 பேரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக விண்ணப்பித்த 130 மாணவர்களையும் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்.

மற்ற 129 பேரும் இந்தியர்கள் ஆவார்கள். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்திய மாணவர்கள் 129 பேரையும் உடனடியாக விடுவிக்கும்படி கோரிக்கை விடுவித்தனர்.

இந்த நிலையில், விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 8 பேர் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள கிழக்கு மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் தங்கள் குற்றவாளிகள் இல்லை என வாதாடினர்.

இதற்கிடையே இந்த விசா முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட 129 இந்திய மாணவர்களும், தெரிந்தே தவறு செய்ததாக அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘வகுப்புகள் ஏதும் நடைபெறாது, வகுப்புகளில் தாங்கள் கலந்துகொள்ளப்போவதில்லை எனத் தெரிந்தே இவர்கள், பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துகொண்டு கட்டணம் செலுத்தினர். தவறான முறையில் மாணவர் என்ற அந்தஸ்தில் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்காக போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனர்’’ என தெரிவித்தனர்.

ஆனால், மாணவர்கள் தரப்பில் வாதாடும் வக்கீல்களோ, போலி பல்கலைக்கழகம் என தெரியாமல் மாணவர்கள் சேர்ந்துவிட்டதாகவும், தவறுகளை கண்டறிவது என்ற பெயரில் அதிகாரிகள் மோசமான ஒரு முறையை பின்பற்றியிருப்பதாகவும் கூறுகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.