Breaking News
‘பேபி சிட்டர்’ விளம்பரத்தால் அதிருப்தி: ‘ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிடாதீர்’ ஷேவாக்குக்கு ஹைடன் எச்சரிக்கை

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல் முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இந்த தொடரின் போது இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டுவை சீண்டிய, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன், ‘டோனி வந்து விடுவதால் டெஸ்ட் தொடர் முடிந்ததும் நாட்டிற்கு திரும்பி விடாதே. இங்கேயே இருந்து பிக்பாஷ் கிரிக்கெட்டில் விளையாடு. உனக்கு ஒரு சொகுசு வீடு தருகிறோம். நானும், எனது மனைவியும் இரவில் சினிமாவுக்கு செல்லும் போது நீ தான் என் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த ரிஷாப் பான்ட், டிம் பெய்னை தற்காலிக கேப்டன் என்றும், அவருக்கு பேசுவதை தவிர வேறு எதுவும் தெரியாது என்றும் சாடினார். கடைசியில் டிம் பெய்னின் குழந்தையை ரிஷாப் பான்ட் தூக்கி வைத்திருக்கும் ஒரு புகைப்படம் வெளியானதும் சர்ச்சையாக கிளம்பிய இந்த விவகாரம் சுபமாக முடிவுக்கு வந்தது.

குழந்தையை பராமரிப்பவர் (பேபி சிட்டர்) என்ற கருவை மையமாக வைத்து எதிர்வரும் இந்தியா–ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரை பிரபலப்படுத்த அந்த போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டது. அதை வைத்து ஒரு விளம்பர படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் சீருடைகளை அணிந்திருக்கும் குழந்தைகளை ஷேவாக் தூக்கி வைத்து ‘நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது குழந்தை பராமரிப்பாளராக இருக்க விருப்பமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் ஏன் அதை செய்யக் கூடாது என்று பதில் அளித்தோம். இதற்காக ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவையும் இந்தியாவுக்கு அழைக்கிறோம்’ என்ற தொனியில் பேசுகிறார். ‘ஒவ்வொரு குழந்தைக்கும் பேபி சிட்டர் தேவை. இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு அது நன்றாக தெரியும்’ என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விளம்பர காட்சி ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிடுவது போல் அமைந்துள்ளதாக கூறி கொதித்து போன அந்த நாட்டு அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எச்சரிக்கை விடுக்கிறேன். ஆஸ்திரேலிய அணியை வைத்து ஒரு போதும் கிண்டல் செய்யாதீர் வீரு (ஷேவாக்). நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து வரும் உலக கோப்பை கிரிக்கெட்டின் போது யார் ‘பேபி சிட்டர்’–ஆக வரப்போகிறார்கள் என்பதை பார்க்கலாம்’ என்று சவால் விடுத்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட்டின் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.