Breaking News
டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் போட்டி சென்னையில் 22–ந் தேதி தொடக்கம்

2–வது டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் போட்டி சென்னை அண்ணாநகரில் வருகிற 22–ந் தேதி முதல் 24–ந் தேதி வரை நடக்கிறது. இதில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். ஒவ்வொரு அணியிலும் சீனியர், ஜூனியர், கேடட் மற்றும் வெட்ரன்ஸ் வீரர், வீராங்கனைகள் இடம் பெறுவார்கள். இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க செயலாளர் வித்யாசாகர், துணைத் தலைவர் முரளிதரராவ், முன்னாள் இந்திய வீரர் ராமன், இந்திய வீரர் சத்யன், இந்து ஸ்போர்ட்ஸ் இயக்குனர்கள் சமீர் பரத்ராம், மதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 60 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். சீனியர் வீரர்களில் அதிகபட்சமாக ராஜேஷ் ரூ.60 ஆயிரத்துக்கும், அடுத்தபடியாக நிதின் திருவேங்கடம் ரூ.58 ஆயிரத்துக்கும், சீனியர் வீராங்கனைகளில் ரீத் ரிஷ்யா அதிகபட்சமாக ரூ.33 ஆயிரத்துக்கும், அடுத்தபடியாக செர்ஹா ஜேக்கப் ரூ.32 ஆயிரத்துக்கும், ஜூனியர் வீராங்கனைகளில் அதிகபட்சமாக ‌ஷர்மிதா ரூ.31 ஆயிரத்துக்கும் ஏலம் போனார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.