Breaking News
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டையொட்டி 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படுவது வழக்கம். அதிலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றது. தடைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. மாடுகள்அவிழ்த்துவிடும் வாடிவாசல்கள் களை இழந்து காட்சியளித்தன.

இந்த ஆண்டு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டம் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை தகர்ந்தது. ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நடக்கத் தொடங்கியது.
மதுரை மாவட்டத்தில் கடந்த 5–ந்தேதி அவனியாபுரத்திலும், 8–ந்தேதி தொட்டப்பநாயக்கனூரிலும், 9–ந்தேதி (நேற்று) பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டின.

இதன் தொடர்ச்சியாக, வரலாற்று சிறப்புமிக்க உலகத்தமிழர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் ஜல்லிக்கட்டை துவங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தனி கேலரி அமைக்கப்பட்டு உள்ளது. 1000 காளைகளும், 1650 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மாடுபிடி வீரர்களுக்கு நன்கொடையாளர்கள் மூலம் தங்கக்காசுகள், ஒரு கார், 5 புல்லட் மோட்டார் சைக்கிள்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு மொபட், சைக்கிள்கள், 2 பசுமாடுகள், 500 செல்போன்கள், பீரோ, கட்டில்கள், மின்விசிறி போன்ற பரிசுகள் வழங்க தயாராக உள்ளன. ஜல்லிக்கட்டை காண நடிகர் லாரன்ஸ் வருகை தந்தார். அவர் பேட்டி அளிக்கையில், மாணவர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியால் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.