Breaking News
ராணுவ மருத்துவமனையில் இருந்து மசூத் அசாரை பாகிஸ்தான் மாற்றியது

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ம் தேதி தற்கொலைப்படை தாக்குதலை நிகழ்த்தியது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு. 40 துணை ராணுவப்படை வீரர்கள் உயிர்தியாகம் செய்த இந்த கொடூரச் சம்பவத்திற்கு காரணமான தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக விளங்கும் மசூத் அசாரை, தொடர்ந்து பாதுகாப்பதிலேயே பாகிஸ்தான் கவனம் செலுத்தி வருகிறது.

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள மசூத் அசார், பாகிஸ்தானில் உள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தான்.

பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழந்து விட்டான் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியது.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில், மசூத் அசார் உண்மையிலேயே உயிரிழந்து விட்டானா? என்பதை உறுதி செய்யும் பணியில், உளவுத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பட்டியலிட வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நிரந்தர உறுப்பு நாடுகள் வலியுறுத்தியிருக்கின்றன. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்புத் தெரிவிக்காது என தகவல் வெளியாகியிருக்கிறது. உலக நாடுகளின் வலியுறுத்தல்படி மசூத் அசார், சர்வதேச பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டால், எந்த ஒரு நாட்டிற்கும் அவன் பயணமாக தடை விதிக்கப்படுவதோடு, அவனது சொத்துக்கள் முடக்கப்பட்டு, ஆயுதங்கள் கொள்வனவும் முற்றாக முடக்கப்படும்.

இதற்கிடையே, மசூத் அசார் உயிரிழந்து விட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும், ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனிடையே ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைத்து மசூத் அசாருக்கு சிகிச்சை அளித்து வந்த பாகிஸ்தான் அரசு, தனது செயல்பாடுகள் அம்பலப்பட்டு போனதால், உடனடியாக அவனது இருப்பிடத்திற்கே அனுப்பி வைத்து விட்டதாக உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே, மசூத் அசாரை பாதுகாத்து வந்த புகாரில் சிக்கிய பாகிஸ்தான் அரசுக்கு, அவனுக்கு அளித்த சிகிச்சையின் மூலம் மேலும் நெருக்கடி உருவாகியிருக்கிறது.

இதனால், ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இருந்து ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைமை பீடம் அமைந்துள்ள பஹவல்பூருக்கே அனுப்பி வைத்து விட்டது. இதனால் செய்வதறியாது திகைத்துப்போயுள்ள ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவிடம் அடிபணிந்து விட்டதாக கூறியிருக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.