Breaking News
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவிக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலாதேவிக்கு உயர் நீதிமன்றக் கிளை நேற்று ஜாமீன் வழங்கியது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக கைது செய்யப்பட்டார். இவர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த 2 மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றக் கிளையில் நேற்று நடந்தது.

சிபிஐக்கு மாற்றக் கோரும் வழக்கில் நிர்மலாதேவியை மார்ச் 12-ல் உயர் நீதிமன்றக் கிளையில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி மதுரை மத்திய சிறையில் இருந்து நிர்மலாதேவி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிற்பகல் 1 மணிக்கு அழைத்து வரப்பட்டார்.

நீதிபதி அறையில் விசாரணைநிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரும் மனு மீதான விசாரணைக்காக நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.

சுந்தர் அமர்வு முன்பு நிர்மலாதேவி பிற்பகல் 2.10 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி அறைக்குள் மாலை 3.35 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் ரகசியமாக நடந்தது.

ஜாமீன் மனு மீதும் விசாரணைஇதைத் தொடர்ந்து ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி தண்டபாணி முன்பாக நடைபெற்றது. அப்போது நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் மீதான வழக்கில் சிபிசிஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் நிர்மலாதேவி இனிமேலும் சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர் சாட்சியங்களை மிரட்டவோ, கலைக்கவோ வாய்ப்பில்லை. ஆகவே அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.

அவர் வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும். விசாரணைக்கு இடையூறு ஏற்படும் விதமாக ஊடகங்களுக்கோ, தனி நபருக்கோ பேட்டி அளிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர் நிர்மலாதேவி மீண்டும் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஜாமீன் விதிமுறைகள் முடிந்த பின்னர் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.