Breaking News
வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி – தொடரையும் கைப்பற்றியது

நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்தது. மழையால் 2 நாள் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்ட இந்த போட்டியில் முதலில் ஆடிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 211 ரன்களில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 432 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ராஸ் டெய்லர் இரட்டை சதம் (200 ரன்) அடித்தார். அடுத்து 221 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 4-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணியினர், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் பவுன்சர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மிரண்டனர்.

முடிவில் வங்காளதேச அணி 2-வது இன்னிங்சில் 56 ஓவர்களில் 209 ரன்னில் அடங்கியது. இதனால் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக கேப்டன் மக்முதுல்லா 67 ரன்னும், முகமது மிதுன் 47 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நீல் வாக்னெர் 5 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே ஹாமில்டனில் நடந்த முதலாவது டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது.

இதற்கிடையே, பீல்டிங்கின் போது இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துடன் 4-வது நாளில் பேட்டிங் செய்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு தசைநாரில் கிழிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கடைசி டெஸ்டில் அவர் ஆடமாட்டார் என்று தெரிகிறது. அத்துடன் வருகிற 23-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சில ஆட்டங்களில் அவர் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடுவது சந்தேகம் தான்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.