Breaking News
கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இன்று தொடங்குகிறது

கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் 15 ஆயிரம் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாது.

மீன்பிடி தடைகாலம்

மீன்களின் இனவிருத்திக்காக மத்திய-மாநில அரசுகள் மீன்பிடி தடைகாலம் ஒன்றை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் தொடங்குகிறது.

கிழக்கு கடற்கரை பகுதிகளில் தடைகாலம் முடிந்த 15 நாட்களில் மேற்கு கடற்கரை பகுதிகளான கேரளா, கர்நாடகம், கோவா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வரும்.

கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 591 மீன்பிடி கிராமங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்களுக்கும் இந்த தடைகாலம் பொருந்தும்.

15 ஆயிரம் விசைப்படகுகள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மீன்பிடி தடைகாலம் என்பது 45 நாட்களுக்கு இருந்தது. ஆனால் சில ஆண்டுகளாக அதை 60 நாட்களாக உயர்த்தி மத்திய-மாநில அரசுகள் நிர்ணயித்தது. அதன்படி, இன்று நள்ளிரவு தொடங்கும் மீன்பிடி தடைகாலம் வருகிற ஜூன் மாதம் 15-ந் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

தமிழகத்தின் முக்கிய துறைமுகங்களான காசிமேடு, கடலூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் விசைப்படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும். மொத்தத்தில் 150 முதல் 240 குதிரை திறன் கொண்ட 15 ஆயிரம் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது என்றும், சென்னையில் மட்டும் 2 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது என்றும் அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவர் நாஞ்சில் ரவி தெரிவித்தார்.

வியாபாரிகள்

மீன்பிடி தடைகாலம் நாட்களில் மீனவர்கள் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். மாறாக 20 குதிரை திறனுக்கும் குறைவான கண்ணாடி இழை படகுகளின் மூலம் குறைந்த தூரத்துக்கு சென்று சிறிய அளவிலான மீன்களை பிடித்துவருவார்கள். மீன்பிடி தடைகாலத்தால் இனி வரக்கூடிய நாட்களில் மீன்களின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அக்டோபர் முதல் டிசம்பர் மாத காலங்களில் மீன்பிடி தடைகாலத்தை வைத்தால் நன்றாக இருக்கும் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான நாஞ்சில் ரவி கூறியதாவது:-

தடைகாலத்தை மாற்ற கோரிக்கை

மீன்பிடி தடைகாலம் இந்த காலத்தில்தான் அமல்படுத்த வேண்டும் என்று அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. மேற்கு கடற்கரை பகுதிகளில் மழைக்காலத்தில் தான் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கிறது. அந்த காலத்தில்தான் மீன்கள் இனவிருத்தி செய்ய ஏதுவாக இருக்கிறது. அவர்கள் அதை சரியாக கடைப்பிடிக்கிறார்கள்.

ஆனால் நமக்கு கோடைகாலத்தில் மீன்பிடி தடைகாலம் என்று நிர்ணயித்து இருப்பதை எந்த மீனவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை மத்திய- மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கையாக வைத்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே அரசுகள் மீனவர்களுடன் ஆலோசித்து அக்டோபர்-டிசம்பர் காலங்களில் தடைகாலத்தை கொண்டுவரலாம்.

அதேபோல், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியமான ரூ.5 ஆயிரம் என்பது போதாது. அதை உயர்த்தி வழங்க வேண்டும். விசைப்படகு உரிமையாளர்களுக்கும் படகுகளை பராமரிப்பதற்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.