Breaking News
தமிழகத்தில் பிரசாரம் நாளை ஓய்கிறது: தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பு பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் வருகை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரு சட்டசபை தொகுதிக்கும் வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அனல் பறக்கும் பிரசாரம்

இதையொட்டி கடந்த சில வாரங்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர்-நடிகைகளும் மும்முரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த்

கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் தொடர்ச்சியாக பிரசாரம் மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

இதேபோல், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். சமீப காலமாக உடல் நலக்குறைவு காரணமாக அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் விஜயகாந்த் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட நேரத்தில் அவர் கலந்து கொண்டார்.

அதன்பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு, டாக்டர்களின் ஆலோசனைக்கு ஏற்ப பிரசாரம் செய்வேன் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி, விஜயகாந்த் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன், பா.ம.க. வேட்பாளர் சாம்பால் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

பிரசாரம் நாளை ஓய்கிறது

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் தொகுதியிலும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடும் தேனி தொகுதியிலும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியிலும் இன்று தீவிர பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் தீவிர பிரசாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் ஒய்கிறது.

தேர்தல் பாதுகாப்பு பணிக் காக ஏற்கனவே 10 கம்பெனி (சுமார் 100 வீரர்கள்) துணை ராணுவப்படை வீரர்கள் தமிழகம் வந்து உள்ளனர். இந்தநிலையில் நேற்று மேலும் 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்தனர்.

தீவிர கண்காணிப்பு

வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால், இறுதிக் கட்டத்தில் நடைபெறும் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிரமாக கண் காணித்து வருகிறது. பறக்கும்படை அதிகாரிகள் மும்முரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி எட்டயபுரம் அருகே கருப்பூர் பகுதியில் உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த அந்தோணிசாமி (வயது 50) என்பவர் பனை தோட்டத்தில் குடிசை அமைத்து கருப்புக்கட்டி செய்யும் தொழில் செய்து வருகிறார். அந்த குடிசையில் அட்டை பெட்டியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கிருந்து வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்து செல்லப்படுவதாகவும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரூ.68½ லட்சம்

இதனையடுத்து தேர்தல் அதிகாரி விக்னேஷ் தலைமையில் பறக்கும் படையினர் நேற்று காலை அங்கு சென்று சோதனை நடத்தி குடிசையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த அட்டை பெட்டி மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்த போது அதில் ரூ.68 லட்சத்து 50 ஆயிரத்து 100 இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த பணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் கோவில்பட்டி யூனியனுக்கு உட்பட்ட பீக்கிலிப்பட்டி பகுதியில் கலைமணி என்பவரின் தோட்டத்தில் மரத்தின் அடியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.7½ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விளாத்தி குளம் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் உதவி தாசில்தார் ராஜ்குமாரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் மத்திமான்விளை என்ற இடத்தில் பறக்கும் படை அதிகாரிகள் ஒரு காரை மடக்கி சோதனையிட்ட போது, அதில் ரூ.40 லட்சம் இருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை அவர்கள் பறிமுதல் செய்து, கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

காரில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர் உடன்குடி கொட்டங்காட்டைச் சேர்ந்த வசீகரன் (56) என்றும், தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர் என்றும் தெரியவந்தது.

மாடு வாங்க சென்றவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த நாரையூர் கூட்ரோடு பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்ற கண்டாச்சிபுரத்தை (விழுப்புரம் மாவட்டம்) அடுத்த பழைய சித்தாமூர் கிழக்கு தெருவைச் சேர்ந்த ஏழுமலை (28), செந்தில் (43) மற்றும் அவர்களுடைய நண்பர் ஆகிய மூவரை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது ஏழுமலையிடம் ரூ.75 ஆயிரமும், செந்திலிடம் 50 ஆயிரத்து 500 ரூபாயும் இருந்தது தெரியவந்தது.

விசாரணையின்போது, அவர்கள் தளவாய்குளம் ஞாயிறு வாரச்சந்தைக்கு மாடுகள் வாங்க சென்றது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் 1 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிகுளம் என்ற இடத்தில் ஒரு காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.12 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினத்தில் 36-வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் சிங்காரவேலு என்பவரிடம் இருந்து 59 ஆயிரத்து 50 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக தெரியவந்ததாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.