Breaking News
பெங்களூருவிடம் வீழ்ந்தது: ‘மோசமான பீல்டிங் தோல்விக்கு காரணம்’ பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் கருத்து

பஞ்சாப் அணி நிர்ணயித்த 174 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. கேப்டன் விராட்கோலி 67 ரன்கள் (53 பந்துகளில் 8 பவுண்டரியுடன்) எடுத்து ஆட்டம் இழந்தார். டிவில்லியர்ஸ் 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 59 ரன்னும், மார்கஸ் ஸ்டோனிஸ் 16 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 28 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கெய்ல் ஆட்டம் இழக்காமல் 99 ரன் குவித்தது வீணானது. பெங்களூரு அணி வீரர் டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டியில் பந்து வீச கூடுதல் நேரம் எடுத்து கொண்டதற்காக பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலிக்கு ரூ.12 லட்சத்தை அபாரதமாக போட்டி அமைப்பு குழு விதித்துள்ளது.

தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஆர்.அஸ்வின் கருத்து தெரிவிக்கையில், ‘கடைசி ஓவரில் பெங்களூரு அணி வெற்றிக்கு 6 ரன்களே தேவைப்பட்டது. டிவில்லியர்ஸ், ஸ்டோனிஸ்சை கட்டுப்படுத்த லெக் ஸ்பின்னர் பந்து வீசினால் சரியாக இருக்கும் என்று கருதி சர்ப்ராஸ் கான் பயன்படுத்தப்பட்டார். அதற்காக சாம் குர்ரன் சிறப்பாக பந்து வீசமாட்டார் என்று அர்த்தம் கிடையாது. நாங்கள் மோசமான பீல்டிங்கால் இந்த ஆட்டத்தில் வெற்றியை தவறவிட்டோம் எனலாம். சில கேட்ச் வாய்ப்புகளையும் கோட்டை விட்டோம். முதல் பாதியில் உலர்ந்து இருந்த மைதானம் பனிப்பொழிவு காரணமாக 2-வது பாதியில் பேட்டிங்குக்கு சாதகமானது. கடைசி 3 ஓவர்களில் 38 ரன்கள் தேவை என்று இருந்த போது சிறந்த பவுலர்களை பயன்படுத்தி பார்த்தேன். ஆனால் அதற்கு தகுந்த பலன் கிடைக்கவில்லை’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.