Breaking News
இலங்கை முழுவதும் தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து : மீண்டும் தாக்குதல் அபாயம் எதிரொலி

இலங்கையில் கடந்த 21–ந் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தில், 3 தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், 253 பேர் பலியானார்கள். தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே சமயத்தில், பயங்கரவாதிகள் நடமாட்டம் இன்னும் இருப்பதால், மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இதுதொடர்பாக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையில், இலங்கை முழுவதும் கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடக்கும் வழிபாடுகள் (திருப்பலி) ரத்து செய்யப்படுவதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. மறுஉத்தரவு வரும்வரை இந்த கூட்டங்களை ரத்து செய்ய கார்டினல் ரஞ்சித் உத்தரவிட்டிருப்பதாக பேராயர் இல்ல செய்தித்தொடர்பாளர் எட்மண்ட் திலகரத்னே தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தேவாலயங்களில் பொது திருப்பலிகள், 5–ந் தேதி தொடங்குவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. தேவாலயத்துக்குள் பை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, கத்தோலிக்க பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இப்பள்ளிகள், 6–ந் தேதி மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், அன்றைய தினம் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கத்தோலிக்க பள்ளிகளின் முதல்வர்களுக்கு கத்தோலிக்க திருச்சபை அறிவுறுத்தி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.