Breaking News
வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கும் தமிழகத்தில் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது 29-ந்தேதி வரை நீடிக்கிறது

தமிழகத்தை நோக்கி வந்த பானி புயல் நேற்று ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. இதனால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற போதிலும் புயலின் திசைவேக மாற்றம் காரணமாக நிலக் காற்றை கடற்பகுதிக்குள் இழுத்துச் சென்றதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

சென்னையை பொறுத்தவரையில், வழக்கமாக பிற்பகலில் இருந்து கடற்காற்று வீச ஆரம்பித்து விடும். இதனால் சென்னையில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் கடற்காற்று காரணமாக மாலை மற்றும் இரவு நேரத்தில் வெப்பத்தின் அளவு ஓரளவு குறைந்து காணப்படும்.

ஆனால், பானி புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னையில் வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் வெப்பத்தின் அளவு வழக்கத்தைவிட கூடுதலாகவே இருந்தது. இதனால், இரவு நேரத்தில் மக்கள் தூங்குவதற்கு சற்று சிரமம் அடைந்தனர்.

இந்த நிலையில், இன்று முதல் கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நீடிக்கிறது. இதனால், இந்த காலக்கட்டத்தில் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் பெரிதும் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

அதே நேரத்தில் தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். இது குறித்து வானிலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பானி புயலின் தாக்கத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லை. துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை மணிக்கூண்டுகள் அகற்றப்பட்டுவிட்டன. தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும்.

ஒருவேளை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.