Breaking News
மும்பை அணி தனிப்பட்ட வீரர்களை நம்பி இல்லை – கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ‘சூப்பர் ஓவர்’ முறையில் ஐதராபாத் சன்ரைசர்சை வீழ்த்தி ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது. இந்த ஆட்டத்தில் குயின்டான் டி காக் (69 ரன்) அரைசதத்தின் உதவியுடன் மும்பை அணி நிர்ணயித்த 163 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத் அணி 2-வதாக பேட்டிங் செய்தது. மிடில் ஓவர்களில் திணறினாலும் மனிஷ் பாண்டே அணியை தூக்கி நிறுத்தினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்ட போது மனிஷ் பாண்டே (71 ரன், 47 பந்து) சிக்சர் அடித்து ஆட்டத்தை சமனுக்கு (டை) கொண்டு வந்தார்.

ஐதராபாத்தின் ஸ்கோரும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் என்று சமனில் நின்றதால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் ஐதராபாத் அணி 2 விக்கெட்டையும் இழந்து 8 ரன் மட்டுமே எடுத்தது. இந்த இலக்கை மும்பை அணி 3 பந்துகளிலேயே எட்டிப்பிடித்து 8-வது வெற்றியை சுவைத்தது.

வெற்றிக்கு பிறகு மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

போதுமான ரன்கள் குவித்து, அதன் மூலம் அனுபவம் இல்லாத பேட்டிங் வரிசையை கொண்ட ஐதராபாத் அணிக்கு நெருக்கடி கொடுத்து மடக்க வேண்டும் என்ற நோக்குடன் ‘டாஸ்’ ஜெயித்ததும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தேன். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்பதை அறிவேன். சென்னை அணிக்கு எதிராக இதே மைதானத்தில் 170 ரன்களை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெற்றோம். இதே போல் இந்த ஆட்டம் சூப்பர் ஓவர் வரை நகர்ந்தாலும் வெற்றி கண்டுள்ளோம். எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் ராகுல் சாஹரும் (4 ஓவரில் 21 ரன்), குருணல் பாண்ட்யாவும் (4 ஓவரில் 22 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்) மிடில் ஓவர்களில் ஐதராபாத்தின் ரன்வேகத்தை கட்டுப்படுத்தினர். இந்த 8 ஓவர்கள் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். இந்த தொடரில் நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். அதற்குரிய பலனை (பிளே-ஆப் சுற்று) அடைந்துள்ளோம்.

ஒரு ஆட்டம் மீதம் வைத்து ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டியிருப்பது நல்ல அறிகுறியாகும். 2017-ம் ஆண்டு கோப்பையை வென்ற போது 2 ஆட்டம் எஞ்சியிருந்த நிலையில் அடுத்த சுற்றை உறுதி செய்திருந்தோம். ஒரு அணியாக நாங்கள் நெருக்கடியை சிறப்பான முறையில் கையாண்டு இருக்கிறோம். பல வீரர்கள் பொறுப்பு எடுத்துக்கொண்டு விளையாடி அணியை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறார்கள்.

எங்களது அணியை பொறுத்தவரை ஒரு சில வீரர்களை மட்டும் நாங்கள் சார்ந்து இல்லை. அதிக ரன்கள் குவித்த டாப்-5 பேட்ஸ்மேன்களில் எங்கள் அணியில் குயின்டான் டி காக்கை (13 ஆட்டத்தில் 462 ரன்) தவிர யாரும் கிடையாது. தனிப்பட்ட வீரர்களால் ஓரிரு ஆட்டங்களில் மட்டுமே வெற்றி தேடித்தர முடியும். ஆனால் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினால், அனைவரும் ஒருசேர தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். இது தான் தற்போதைய மும்பை அணியின் தனித்துவமாகும். ஒவ்வொருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றிக்கு உதவிட வேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும். இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.