Breaking News
ஒரு நாள் முன்னதாக மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தை முடித்த தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

மேற்கு வங்காள மாநிலத்தில் 9 நாடாளுமன்ற தொகுதிகளில் வரும் 19-ந் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலை முடிவுக்கு வர இருந்தது.

ஆனால் கொல்கத்தாவில் 14-ந் தேதி பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா நடத்திய பேரணி நடத்தினார். அதில் பெருமளவு வன்முறை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு 9 தொகுதிகளில் பிரசாரத்தை ஒரு நாள் முன்னதாக 16-ந் தேதி (நேற்று) இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ள தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 324-ஐ பயன்படுத்தி இந்த நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. சுதந்திர இந்தியாவின் தேர்தல் வரலாற்றில் இப்படி அரசியல் சாசன சட்டத்தை பயன்படுத்தி தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து இருப்பது இதுவே முதல் முறை.

இதை அந்த மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடினார். பல்வேறு எதிர்க்கட்சிகளும் தேர்தல் கமிஷனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “தேர்தல் நடத்தை விதிகள், மோடி நடத்தை விதிகளாக மாறி உள்ளது. அரசியல் சாசன சட்டப்பிரிவு 324-ன்படி, அனைவருக்கும் சம வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டிய கடமையில் இருந்து தேர்தல் கமிஷன் முழுமையாக விலகி உள்ளது. தேர்தல் கமிஷனர்கள் நியமன செயல்முறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது” என குறிப்பிட்டார்.

மேலும் தேர்தல் கமிஷன் தன் சுதந்திரத்தை முற்றிலும் இழந்து விட்டது எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கருத்து தெரிவிக்கையில், “மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த தேர்தல் வன்முறையைப் பொறுத்தமட்டில், அது பாரதீய ஜனதா கட்சியும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசும், பாரதீய ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷாவும் மம்தா பானர்ஜி அரசை குறி வைத்து செய்த சதிதான் காரணம். மோடி அரசின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்கு சதி செய்துதான் மம்தா அரசு குறி வைக்கப்படுகிறது” என கூறினார்.

அத்துடன், “இப்படி மம்தா பானர்ஜிக்கும், அவரது அரசுக்கும் களங்கம் ஏற்படுத்த சதிசெய்வது ஒரு பிரதமருக்கு உரித்தான செயல் அல்ல” எனவும் கண்டித்தார்.

தேசிய மாநாடு கட்சித்தலைவர் உமர் அப்துல்லாவும் தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில் குறிப்பிடுகையில், “ மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா கட்சி, தேர்தல் கமிஷனுடன் அணி சேர்ந்து கொள்ளலாம். வாக்காளர்களை பிளவுபடுத்தும் வகையில் தங்களது பிரசாரத்தை வடிவமைத்துக்கொள்ளலாம். ஆனால் இதெல்லாம் வேலைக்கு ஆகாது. அங்கு தேர்தல் முடிவு வெளியாகிறபோது, மம்தா பானர்ஜி கட்சி அங்கு முழுமையான வெற்றி பெறப்போகிறது” என தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை கடுமையாக சாடினார்.

அவர், “ மேற்கு வங்காளத்தில் மட்டும் பிரசாரத்தை தேர்தல் கமிஷன் முன்கூட்டியே முடித்தது, நேர்மையான அனைத்து ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது. இதற்கு எதிரான மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு நான் முழுமையான ஆதரவு அளிக்கிறேன்” என கூறினார்.

இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவு கரம் நீட்டிய காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மாயாவதி நன்றி தெரிவித்துள்ளார்.

“பாரதீய ஜனதா கட்சியின் வழிகாட்டுதல்கள்படி தேர்தல் கமிஷன் எடுத்துள்ள பாரபட்சமான நடவடிக்கை, ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் 14-ந் தேதி நடந்த வன்முறையின்போது தத்துவ மேதை வித்யாசாகர் சிலை சேதப்படுத்தப்பட்டது.

இந்த சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் என உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார்.

ஆனால் அதை மம்தா பானர்ஜி ஏற்க மறுத்து விட்டார். இதையொட்டி அவர் குறிப்பிடுகையில், “கொல்கத்தாவில் வித்யாசாகர் சிலை மீண்டும் நிறுவப்படும் என மோடி வாக்குறுதி அளித்திருக்கிறார். அவர்களது பணத்தை நாம் ஏன் பெற வேண்டும்? மேற்கு வங்காளத்தில் அதற்கு தேவையான நிதி ஆதாரங்கள் இருக்கின்றன” என்று கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.