Breaking News
தைவான் நாட்டில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து – நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

ஆசிய நாடுகளில் ஒன்று தைவான். இங்கு ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு 2017-ம் ஆண்டு மே 24-ந் தேதி ஒரு தீர்ப்பினை வழங்கியது.

ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு தடை விதிப்பது, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, இது தொடர்பாக தேவையான சட்ட திருத்தத்தை நாடாளுமன்றம் 2 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டும் என்று அந்த கோர்ட்டு உத்தரவிட்டது.

இது தொடர்பாக அங்கு மக்களின் கருத்தை அறியும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற மக்களில் பெரும்பான்மையினர், ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து கொடுப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள், “ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடைபெறுவதுதான் திருமணத்துக்கான இலக்கணம்” என கூறினர்.

இருந்த போதிலும் அரசியல் சாசன கோர்ட்டின் தீர்ப்புக்கு அந்த நாட்டின் அரசு இணங்கி, ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கும் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற உடன்பட்டது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 மசோதாக்கள் மீது உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர்.

முடிவில், ஆகச்சிறந்தது என்று கருதப்படுகிற அரசாங்கத்தின் மசோதாவுக்கு உறுப்பினர்களிடையே ஆதரவு பெருகியது.

அந்த மசோதா நேற்று ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 66 ஓட்டுக்கள் விழுந்தன. எதிராக 27 வாக்குகள் கிடைத்தன. பெரும்பான்மையானவர்கள் மசோதாவை ஆதரித்து ஓட்டு போட்டதால் மசோதா நிறைவேறியது.

இதை அறிந்து கொள்வதற்காக கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் நாடாளுமன்றத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஓரின சேர்க்கை ஆர்வலர்கள் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மசோதா நிறைவேறியதை அறிந்து அவர்கள் பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர்.

இந்த மசோதாவுக்கு அந்த நாட்டின் அதிபர் சாய் இங் வென் ஒப்புதல் அளித்து சட்டம் ஆக்கியவுடன் அமலுக்கு வந்துவிடும்.

இதையொட்டி தைவான் திருமண சமத்துவ கூட்டணி அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெனிபர் லு கருத்து தெரிவிக்கையில், “ சமத்துவத்துக்கான போராட்டம் இத்துடன் நின்று விடாது. பாரபட்சமாக நடத்தப்படுவது, மிரட்டப்படுவது போன்றவற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்குவது நல்லதுதான். ஆனால் இது மட்டுமே போதுமானது அல்ல” என குறிப்பிட்டார்.

மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குனர் பில் ராபர்ட்சன் கருத்து தெரிவிக்கையில், “இது மாபெரும் வெற்றி” என குறிப்பிட்டார்.

ஆசிய நாடுகளில் தற்போது தைவான்தான், முதன்முதலாக ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.