Breaking News
‘அரசியல் என்னுடைய தொழில் அல்ல’ கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அரசியல் மாண்பின் அடிப்படையில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகமான வாக்குகள் அளித்து 14 மாதங்கள் ஆன மக்கள் நீதி மய்யம் என்ற குழந்தையை எழுந்து நடந்து, ஓட விட்டிருக்கிறார்கள். நேர்மையின் அடிப்படையில் எங்களை நம்பி வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக மக்களுக்கு கடமை பட்டுள்ளோம். தொடர்ந்து அவர்களுக்காக செயலாற்றுவோம். எங்களை பார்த்து கொக்கரிக்க எல்லோரும் காத்திருந்தபோது, எங்களுக்கு பாராட்டுகள் வந்துகொண்டிருக்கின்றது. நேர்மையான வழியில் சென்றால் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையை மக்கள் எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். நெஞ்சை நிமிர்த்தி பேசும் அளவுக்கான சூழலை இந்த தேர்தலில் மக்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள்.

பா.ஜ.க.வின் வரலாறு காணாத வெற்றி தமிழக மக்கள் கொடுத்தது அல்ல. அது தான் எனக்கு சந்தோஷம். கிராமப்புறங்களில் மக்கள் நீதி மய்யம் குறைவான வாக்குகள் பெறுவதற்கு பாதுகாக்கப்பட்ட ஏழ்மையே காரணம். 5 வருடங்களுக்கு ஒரு முறை பாதுகாத்துக்கொள்ளமுடியும் என்பதற்காக ஏழ்மையை தக்கவைத்துக்கொள்கிறார்கள் என்று கருதுகிறேன். புதிதாக உருவான கட்சிக்கு நாங்கள் பெற்ற வாக்குகள் சாதனை தான்.

பணப்புலங்களுக்கு மத்தியில் இந்த அளவுக்கு வாக்குகள் பெற்றது பெரிய விஷயமாக பார்க்கிறோம். பா.ஜ.க.வுக்கு ‘பி’ ‘டீம்’ யார்? என்பதை நீங்கள் (பத்திரிகையாளர்கள்) தான் கண்டுபிடிக்கவேண்டும். ஆனால் நேர்மைக்கு ‘ஏ’ ‘டீம்’ நாங்கள். தமிழகத்தை இந்தியாவின் ஒரு பகுதியாகவும், வளமாகவும் வைத்திருக்கவேண்டியது மத்தியில் மீண்டும் அமைய உள்ள அரசின் கடமை. வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு நிகராக, தமிழகத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

விவசாயம் கெட்டுப்போகாத திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தில் கொண்டுவரவேண்டும். தமிழகத்தை எழுச்சி மிகுந்த, முன்னோடி மாநிலமாக மாற்றுவது தான் எங்களுடைய இலக்கு. அரசியல் என்னுடைய தொழில் அல்ல. அது தொழிலாக இருப்பது தப்பு என்று கருதும் கட்சி மக்கள் நீதி மய்யம். அரசியலை நான் தொழிலாக ஆக்கவில்லை. என்னுடைய கூடுதல் செயல்பாடுகளில் ஒன்று தான் அது. நேர்மையாக நான் பணம் சம்பாதிப்பேன்.

எனக்கு தெரிந்தது கலை தான். அதனால் தொடர்ந்து நடிப்பேன். அது நடக்கக்கூடாது என்று, நல்ல அலுவலகத்தை (பதவி) கொடுத்து உட்கார வைத்தால் அந்த வேலையை செய்வேன். கிராம சபை கூட்டங்களை மேலும் சிறப்பாக நடத்துவோம். தேர்தல் முடிவுகளால் பெரும் ஊக்கத்தை பெற்றிருக்கிறோம். இன்னும் பெரிய கடமை இருக்கிறது என்ற உணர்வை மக்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். நேர்மையான வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் ஆர்.மகேந்திரன், அக்கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கமீலா நாசர், ஏ.ஜி.மவுரியா, ரங்கராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.