Breaking News
அபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் விளம்பரம் : இந்தியர்கள் எதிர்ப்பு

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் துணை ராணுவ வீரர்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட்டில் இருக்கும், பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு மழைபொழிந்தன.

அதனை தொடர்ந்து, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் விமானங்களை விரட்டியடிக்கும் முயற்சியின்போது, சென்னை சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார்.

இதன் பிறகு, சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் பேரில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி வரும் 16–ந்தேதி நடக்க உள்ளது. இதையொட்டி, பாகிஸ்தானை சேர்ந்த ஜாஸ் டி.வி. விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், அபிநந்தனை போல மீசை வைத்து, இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை அணிந்த ஒருவர், டீ பருகி கொண்டே கேள்விக்கு விடை அளிப்பது போல உள்ளது. யாரெல்லாம் விளையாட இருக்கிறார்கள் என்ற கேள்விற்கு, ‘நான் இதற்கு பதிலளிக்க கூடாது’ என அந்த நபர் கூறுகிறார். இதை போல் மற்றொரு கேள்விக்கும் ‘நான் இதற்கு பதிலளிக்க கூடாது’ என கூறுகிறார்.

பின்னர் ‘டீ’ எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு ‘அருமையாக உள்ளது’ என பதிலளிக்கிறார். பின் அவரை அங்கிருந்த போக சொல்ல, அவர் டீ கப்புடன் அங்கிருந்து செல்கிறார். அப்போது அவரை தடுத்து நிறுத்தி ‘கப்’ எங்களுக்கு என கூறி அவரிடம் இருந்து கப்பை வாங்குகிறார்கள்.

இந்த விளம்பர வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது. அதே சமயம் இந்த விளம்பரம், அபிநந்தனை கேலி செய்யும் வகையில் இருப்பதாக கூறி இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.