Breaking News
தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கழிப்பறைகள் மூடல் நோயாளிகள் அவதி

தமிழகத்தில் பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தாலும், கோடை காலம் என்பதாலும் தற்போது சொல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது.

தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக மக்கள் தண்ணீருக்காக தவித்து வருகின்றனர். இரவு பகல் பாராமல், வேலைக்கு கூட போகாமல் தண்ணீருக்காக குடங்களை சுமந்தபடி மக்கள் அங்கும் இங்கும் அலைந்து வருகின்றனர். குடிசை வீடுகள் தொடங்கி அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் மட்டும் அல்லாமல், சிறிய மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களையும் தண்ணீர் பிரச்சினையானது தள்ளாட வைத்துவிட்டது.

சென்னையின் பிரதான ஆஸ்பத்திரியாக ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி விளங்குகிறது. இங்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இத்தகைய சிறப்பு பெற்ற ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் தற்போதைய தண்ணீர் பஞ்சத்தால், ஏராளமான கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளதை பார்க்க முடிந்தது. இந்த ஆஸ்பத்திரிக்கு சென்னை குடிநீர் வாரிய லாரிகள் மூலம் தண்ணீர் பெறப்பட்டபோதிலும், ஆஸ்பத்திரியின் தண்ணீர் தேவையை முழுமையாக நிறைவேற்றியதாக தெரியவில்லை.

ஆஸ்பத்திரியில் நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் வார்டுகளின் கழிப்பறைகளில் தண்ணீர் வந்தபோதிலும், ஆஸ்பத்திரியின் பிரதான கட்டிடங்களான டவர்-1 மற்றும் டவர்-2 ஆகிய அடுக்குமாடி கட்டிடங்களின் தரைத்தளத்தில் ஆண், பெண் நோயாளிகளுக்கு தனித்தனியே கழிப்பறைகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு பல்வேறு சோதனைகளை மேற்கொள்வதற்காக புற நோயாளிகளாக ஏராளமானோர் வருகிறார்கள். இவர்கள் இந்த பகுதியில் உள்ள கழிப்பறைகளையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

ஆனால், இந்த 2 அடுக்குமாடி கட்டிடங்களின் தரைத்தளத்தில் உள்ள கழிப்பறைகளில் பல கழிப்பறைகள் நேற்று மூடப்பட்டு கிடந்தன. அதிலும் குறிப்பாக ஆண் நோயாளிகளுக்கான கழிப்பறைகள் மூடப்பட்டு கிடந்தன. அப்போது சோதனைக்காக பாட்டிலில் சிறுநீர் எடுத்து கொடுப்பதற்காக வந்த ஆண் நோயாளி ஒருவர் கழிப்பறைகள் மூடப்பட்டு கிடந்ததால் செய்வது அறியாமல் திகைத்தார்.

அவர் உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுக்கு சென்று தனது சிறுநீரை பாட்டிலில் சேகரிக்கவும் அனுமதிக்கப்படாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இறுதியில் தனக்கு பாதுகாப்பாக வந்த பெண்ணின் உதவியுடன் பெண் நோயாளிகளுக்கான கழிப்பறைக்குள் சென்று தனது சிறுநீரை பாட்டிலில் சேகரித்து கொடுத்த பரிதாபத்தை பார்க்க முடிந்தது. இவ்வாறு தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி உள்ளனர் என்று கூறினால் அது மிகையல்ல.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.