Breaking News
மக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் லாரிகள் மூலம் வினியோகம் எடப்பாடி பழனிசாமி பேட்டி

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார். அவருடைய உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதிக்கு பின்புறம் இடம் ஒதுக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

அந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்ட தமிழக அரசு முடிவு எடுத்து, அதற்காக ரூ.50 கோடியே 80 லட்சம் நிதியை ஒதுக்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு (2018) மே மாதம் 7-ந்தேதி நடந்தது.

சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் அமைக்கப்பட இருக்கிறது. அதில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவு சின்னம் அமைக்கப்படுகிறது.

இந்தநிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைப்பதற்காக நடைபெறும் பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று மாலை வந்தார்.

முதலில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா சமாதிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவருடன் வந்த அமைச்சர்களும் சென்றனர். எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவராக சென்று மலர் தூவி மரியாதை செய்தனர்.

அதன்பின்னர், நினைவு மண்டபம் தொடர்பாக வைக்கப்பட்டு இருந்த வரை படத்தையும், மாதிரி வடிவத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அவருக்கு பொதுப்பணித்துறையின் (கட்டிடம்) தலைமை பொறியாளர் எம்.ராஜமோகனும், செயற்பொறியாளர் ஆயத்தரசும் விளக்கி கூறினார்கள்.

அதை கேட்டறிந்த முதல்- அமைச்சர், அங்கிருந்து எம்.ஜி.ஆர். சமாதிக்கு சென்றார். மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். சமாதியில் மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர், நினைவு மண்டபத்துடன் கூடிய மற்ற கட்டிடங்களை பார்வையிட்டார். கடைசியாக ஜெயலலிதா சமாதியில் பதிக்கப்படும் ‘டைல்ஸ்’ கற்களை பார்வையிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா சமாதி அருகே நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டிட பணிகளை பார்வையிட்டோம். பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வேகமாக, துரிதமாக நடைபெற்று முடிக்க வேண்டும் என என்ஜினீயர்களை கேட்டு இருக்கிறோம். ஜெயலலிதாவின் புகழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக இந்த நினைவு மண்டபம் அமைய இருக்கிறது.

கிட்டத்தட்ட 60 சதவீதம் பணிகள் முடிந்து இருக்கிறது. இன்னும் 5 மாத காலத்துக்குள் இந்த பணிகள் முழுவதும் நிறைவடைந்து, மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும். இது மிகவும் தொழில்நுட்பமான கட்டிட பணி. மிகுந்த வேலைப்பாடுகளுடன் நடந்து கொண்டு இருக்கிறது. வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஜெயலலிதா சமாதிக்கு வந்து பிரார்த்தனை, மரியாதை செய்துவிட்டு சென்றுவிட்டார்கள்.

தி.மு.க. தன்னுடைய பாணியில் நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார்கள். நாங்கள் உண்மையை பேசுகிறோம். தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் இந்தி படித்து இருக்கிறார். ஆனால் அவர் தமிழ் வாழ்க என்று சொல்கிறார். நாங்கள் அப்படி பொய் பேசவில்லை.

உள்ளப்பூர்வமாக, மனப்பூர்வமாக தமிழை மதிக்கக்கூடியவர்கள் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள். எங்கள் உள்ளத்திலே தமிழ் இருக்கிறது. உள்ளாட்சி துறை அமைச்சர் நேற்று (நேற்று முன்தினம்) அனைத்து அதிகாரிகளையும் அழைத்து, குடிநீர் பிரச்சினையை தீர்க்க என்னென்ன வழிகள் இருக்கிறது? என்று ஆலோசனை நடத்தினார்.

குடிநீர் பிரச்சினைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ? அங்கெல்லாம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடுமையான வறட்சி என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இயற்கை பொய்த்துவிட்டது. நமக்கு கிடைக்க வேண்டிய மழை அளவு குறைவாக இருக்கிறது. பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. நிலத்தடி நீரும் கீழே சென்றுவிட்டது. அதனால் தான் இந்த வறட்சி ஏற்பட்டுள்ளது.

குடிநீரை பொறுத்தவரை, ஜெயலலிதா அரசு தொடர்ந்து, லாரிகள் மூலம் மக்களுக்கு வழங்கி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இதேபோல், லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் கீழே சென்றுவிட்டதால், குடிநீர் வாரியம் வழங்கும் நீரை தான் குளிப்பதற்கு, துவைப்பதற்கு என எல்லா தேவைகளுக்கும் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

மக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்க அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அக்டோபர், நவம்பரில் தான் பருவமழை நமக்கு பெய்யும். அதுவரை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் தான், நிலத்தடி நீரை எடுத்து மக்களுக்கு வினியோகம் செய்கிறோம்.

அதேபோல், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திலும் போதிய அளவு எடுத்து மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இன்னும் 3 முதல் 4 மாதங்களுக்கு நிலத்தடி நீரை எடுத்து தான் குடிநீர் வழங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். மக்கள் இதை புரிந்து கொள்ளவேண்டும். அனைவரும் அரசுக்கு துணை நிற்கவேண்டும்.

ஏதோ ஒரு இடத்தில் பிரச்சினை இருந்தால், அதை பெரிதுபடுத்தி, தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பிரச்சினை இருப்பதாக மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம். சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய ஏரிகள் வறண்டுவிட்டன. 12 டி.எம்.சி. கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீரும், 2 டி.எம்.சி. தான் கிடைத்தது.

கண்டலேறு அணையில் 8½ டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் தான், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியும். ஆனால் அங்கு 4½ டி.எம்.சி. தான் இருக்கிறது. அங்கிருந்து தண்ணீர் பெறமுடியாத சூழல் இருக்கிறது. இருந்தாலும் மேட்டூர் அணையில் இருந்து, தண்ணீரை திறந்துவிட்டு, வீராணம் ஏரியை நிரப்பி, அதன்மூலம் போதுமான அளவு தண்ணீரை கொடுத்து கொண்டு இருக்கிறோம்.

ஆகவே அரசை பொறுத்தவரையில், எங்கெல்லாம் மக்களுக்கு குடிநீர் பிரச்சினை இருக்கிறதோ? அதை தீர்த்துவைப்பதற்கு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு பிறப்பித்து, அதற்கு தேவையான நிதி ஒதுக்கி முறையாக நீர் வினியோகிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.