Breaking News
வனப்பகுதியில் படமாக்கப்பட்ட சாகச நிகழ்ச்சியில் மோடி: டிஸ்கவரி சேனலில் ஆகஸ்டு 12-ந் தேதி ஒளிபரப்பாகிறது

‘டிஸ்கவரி’ ஆங்கில டி.வி. சேனலில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம். காடு, மலை, பாலைவனம் போன்ற இடங்களில் பயணம் மேற்கொண்டு ஆபத்தான சூழ்நிலைகளில் பிரச்சினைகளை சமாளித்து உயிர் வாழ்வது எப்படி? என்பதை அடிப்படையாக கொண்டது இந்த நிகழ்ச்சி. சாகச பிரியரான பியர் கிரில்ஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு நெருக்கடிகளை சமாளித்து உயிர் வாழ்வது எப்படி? என்பதை செய்து காட்டுவது மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பு இருப்பதோடு, பியர் கிரில்சுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

உலக அளவில் முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் ஏற்கனவே வழங்கி இருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமாவுடன் இணைந்தும் பியர் கிரில்ஸ் இந்த நிகழ்ச்சியை வழங்கி உள்ளார்.

அந்த வகையில் பியர் கிரில்சும், பிரதமர் மோடியும் பங்கு கொள்ளும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ சிறப்பு நிகழ்ச்சி படமாக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள ஜிம் கோர்பட் தேசிய பூங்காவில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு நிகழ்ச்சி டிஸ்கவரி மற்றும் அதன் குழும சேனல்களில் வருகிற ஆகஸ்டு 12-ந் தேதி ஒளிபரப்பாகிறது. உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளி ஆகிய மொழிகளில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது

இந்த தகவலை டிஸ்கவரி டி.வி. சேனல் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சி குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காடுகள், மலைகள் என்று பல ஆண்டுகள் நான் இயற்கை சூழ்நிலையில் வாழ்ந்து இருக்கிறேன். அது என் வாழ்க்கையில் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், அரசியலுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலையில் அப்படிப்பட்ட வாழ்க்கையை முன்னிலைப்படுத்துவது போன்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் நான் பங்கு கொள்ள வேண்டும் என்றதும் எனக்கு அதில் ஆர்வம் ஏற்பட்டது.

என்னை பொறுத்தமட்டில் இந்த நிகழ்ச்சியை, இந்தியாவின் வளம் செறிந்த சுற்றுச்சூழல் பெருமையையும், சுற்றுச்சூழலை பாதுகாப்பது மற்றும் இயற்கையோடு சேர்ந்து வாழ வேண்டியதன் அவசியம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன். வனப்பகுதியில் மீண்டும் ஒரு முறை நேரத்தை செலவிட்டது, அதுவும் இயற்கையை அறிந்துகொள்வதில் சளைக்காத ஊக்கமும், தேடலில் ஆர்வமும் கொண்ட பியர் கிரில்சுடன் அங்கு இருந்தது எனக்கு சிறந்த அனுபவமாக அமைந்தது. இவ்வாறு அதில் மோடி கூறி உள்ளார்.

பிரதமர் மோடியுடன் இந்திய வனப்பகுதியில் சாகச பயணம் மேற்கொண்டதை தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்றும், அதுகுறித்து பெருமைகொள்வதாகவும் பியர் கிரில்ஸ் கூறி இருக்கிறார்.

“பிரபலமான ஒரு உலக தலைவருடன் (மோடி) வனப்பகுதியில் நேரத்தை செலவிட்டதை உண்மையிலேயே எனக்கு கிடைத்த கவுரவமாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். ஒரு மிகப்பெரிய தேசத்தை வழிநடத்திச் செல்லும் தலைவருடன் நேரத்தை செலவிட்டதும், அவரை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் எனக்கு மிகுந்த உற்சாகம் அளிப்பதாக அமைந்தது” என்று அவர் கூறி உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.