Breaking News
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரில் பணம் வசூலிக்க இடைக்கால தடை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழ் திரைப்படத்தில் பிரபல சண்டை பயிற்சியாளராக இருப்பவர் எஸ்.பி.ஜாக்குவார் தங்கம். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டு தலைவராக உள்ளேன். இதே பெயரில், போலியாக ஒரு சங்கத்தை பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட சிலர் தொடங்கியுள்ளனர். அச்சங்கத்துக்கு தலைவராக பாலசுப்பிரமணியம் உள்ளார். இவர்கள், நான் தலைவராக இருக்கும் சங்கத்தின் பெயரையும், அதன் மயில் சின்னத்தையும் தவறாக பயன்படுத்துவதுடன், பலரிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்து வருகின்றனர்.

அச்சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து என்னை நீக்கிவிட்டதாகவும் அறிவித்துள்ளனர். எங்களது சங்கம், சங்கங்களின் பதிவாளரிடம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எங்கள் சங்கத்தின் பெயரை பயன்படுத்தவும், உறுப்பினர்களிடம் இருந்து பணம் வசூலிக்கவும், குறிப்பாக வடபழனியில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் உள்ள கணக்கு மூலம் பணம் வசூலிக்கவும் தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.மகேஸ்வரி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘எதிர்மனுதாரர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் மனுதாரரின் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி தயாரிப்பாளர்கள் கில்டு என்ற பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

இந்த சங்கத்தின் பெயரில் வங்கிக் கணக் குகள் தொடங்கி, குறிப்பாக யூனியன் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கியின் வடபழனியில் கிளையில் உள்ள வங்கிக்கணக்கு மூலம் பணம் வசூலிக்கவும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் வருகிற ஆகஸ்டு 9-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.