Breaking News
விமானத்திற்கு ‘சாஸ்திரா பூஜை’ நடத்தியதில் எந்த தவறும் இல்லை- பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கருத்து

பிரான்சில் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து ரபேல் விமானத்தை பெற்றுக் கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அதற்கு ‘சாஸ்திரா பூஜை’ நடத்தினார்.

ரபேல் விமானத்திற்கு சந்தனப் பொட்டு வைத்து, முன் பகுதியில் தேங்காய், பூக்கள் வைத்து, ஓம் என்று இந்தியில் ராஜ்நாத் சிங் எழுதினார். விமானத்துக்கு கயிறு கட்டிய பின், டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் ஆட்சியிலும் போபர்ஸ் போன்ற பீரங்கிகள் வாங்கப்பட்டதாகவும், அதற்கு இது போன்ற பூஜைகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் கூறினார். மேலும் இது போன்ற மூட நம்பிக்கைகள் முடிவுக்கு வரும் போது, இந்தியா தனது சொந்த போர் விமானங்களை தயாரிக்கும் என்று மற்றொரு காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் தெரிவித்தார்.

இந்தியாவில் இது போன்ற விமர்சங்கள் எழுந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியும், ராணுவ செய்தி தொடர்பாளருமான ஆசீப் கஃபூர், ராஜ்நாத் சிங் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “ரபேல் விமானத்திற்கு ‘சாஸ்த்ரா பூஜை’ செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை. அது மதம் சார்ந்த நம்பிக்கை. எனவே, அதை நாம் மதிக்க வேண்டும். மேலும் விமானம் என்பது வெறும் இயந்திரம் மட்டுமல்ல. அதை கையாள்பவரின் திறன், உறுதி மற்றும் தீராத வேட்கை ஆகியவையும் மிக முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் விமான படையை குறித்து நான் பெருமை படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவில் அசாதாரணமான சூழல் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் இந்த கருத்து பலரின் கவனத்திற்கு உள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.