Breaking News
பீஜிங்கில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

பிரதமர் மோடியுடன் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள அதிகாரபூர்வமற்ற 2 நாட்கள் சந்திப்புக்காக பீஜிங் நகரில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் தனி விமானத்தில் இன்று காலை புறப்பட்டார்.

இந்த தகவலை சீன அரசின் அதிகாரபூர்வ செய்தித்தளமான ஜின்குவா உறுதி செய்துள்ளது.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரபூர்வமற்ற 2-வது கட்டச் சந்திப்பு இன்று நடைபெறுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி சென்னை நகரில் மத்திய அரசும், தமிழக அரசும் பல்வேறுவிதமான சிறப்பு ஏற்பாடுகளையும், தீவிரமான கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்துள்ளனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க நாதஸ்வரம், மேளதாளம் உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரிய இசைக் கலைஞர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

மாமல்லபுரத்தில் உள்ள ‘பஞ்ச் ரதாஸ்’ என்ற இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் வரவேற்கும் வகையில் எதிர்பார்க்கப்படும் பதினெட்டு வகையான காய்கறிகளும் பழங்களும் பயன்படுத்தப்பட்டு வளைவு அமைக்கப்பட்டு உள்ளது.

பெய்ஜிங் நகரில் இருந்து இன்று காலை புறப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று பிற்பகலுக்குப் பின் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். அதன்பின் அங்கிருந்து அவரின் பிரத்யேக கார் மூலம் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மதிய உணவு உண்கிறார். பின் மாலையில் மாமல்லபுரம் செல்கிறார்.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசும் சீன அதிபர் ஜி ஜின்பிங் பல்வேறு கலைநிகழ்ச்சிகளைப் பார்க்க உள்ளார். அங்கு சீன அதிபருக்கு பிரமதர் மோடி இரவு விருந்து அளிக்க உள்ளார்.

அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு இரவு மீண்டும் கிண்டி தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு வந்து சீன அதிபர் ஓய்வெடுக்க உள்ளார். நாளை காலை மீண்டும் மாமல்லபுரம் சென்று பிரதமர் மோடியுடன் 2-வது நாளாக சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து சீன அதிபர் பேசுகிறார். பிற்பகலுக்குப் பின் சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னையில் இருந்து நேபாளம் புறப்பட்டுச் செல்கிறார்.

இதுகுறித்து சீன அரசின் ஜின்குவா இன்று வெளியிட்ட செய்தியில், ” சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் இன்று இந்தியாவின் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச உள்ளார்கள். இரு நாடுகளுக்கு இடையேயான கடந்த கால, நிகழ்கால வேறுபாடுகளைக் கடந்து வருவதையும், ஒத்துழைப்பையும், கூட்டுறவையும் வளர்ப்பதை பற்றி பேச உள்ளார்கள். நேபாளம், இந்தியாவுக்கு செல்லும் ஜி ஜின்பிங்கின் பயணம் இரு நாடுகளுடனான நட்புறவை வலுப்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.