Breaking News
‘ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதே இலக்கு’ சென்னையில் பி.வி.சிந்து பேட்டி

உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதற்காக தனது தாயார் விஜயாவுடன் சென்னை வந்த அவருக்கு வேலம்மாள் பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாரட்டு வண்டியில் பள்ளி வளாகத்தில் அழைத்து வரப்பட்ட சிந்துவுக்கு மாணவ-மாணவிகள் பூங்கொத்து கொடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர். வேலம்மாள் பள்ளி நிர்வாகம் சார்பில் சிந்துவுக்கு ரூ.15 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை வேலம்மாள் கல்வி நிறுவன தலைமை செயல் அதிகாரி எம்.வி.எம்.வேல்முருகன் வழங்கினார்.

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வேலம்மாள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் ரூ.60 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதனை பள்ளி நிர்வாகம் சார்பில் பி.வி.சிந்து வழங்கி மாணவ-மாணவிகளை பாராட்டினார். விழாவில் பி.வி.சிந்து பேசுகையில், ‘எனக்கு எனது தந்தை தான் முன்மாதிரி. எனது தந்தையும், தாயாரும் கைப்பந்து வீரர், வீராங்கனைகள் ஆவார்கள். அவர்கள் எனது விளையாட்டு ஆர்வத்துக்கு பக்கபலமாக விளங்கி வருகிறார்கள்.

நான் 8 வயது முதல் பேட்மிண்டன் விளையாடி வருகிறேன். பேட்மிண்டன் தவிர எந்தவொரு விளையாட்டு பக்கமும் எனது கவனத்தை திருப்பியது கிடையாது. பேட்மிண்டன் தான் எனது வாழ்க்கை என்று திட்டமிட்டு கடினமாக உழைத்து வருகிறேன். இந்த விளையாட்டுக்காக நான் பல தியாகங்களை செய்துள்ளேன். உங்களை போல் எனக்கும் சாக்லெட், ஜஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசை உண்டு. ஆனால் உடல் தகுதியை பேணுவதற்காக அதனை எல்லாம் தவிர்த்து வருகிறேன். அதிகம் ஆயில் கலந்த பொருட்களையும், துரித உணவுகளையும் நான் சாப்பிடுவது கிடையாது. அதேநேரத்தில் புரத சத்துடைய உணவுகளை எடுத்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். பல தியாகங்களை செய்ததுடன் அர்ப்பணிப்புடன் செயல்படுவதால் தான் உங்கள் முன் உலக சாம்பியனாக நான் நிற்கிறேன். நீங்களும் உங்களது ஆசிரியர்கள் சொல்லும் ஆலோசனைகளை கேட்டு உங்களுக்கு பிடித்தமான துறையில் அர்ப்பணிப்புடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் சாதிக்கலாம்’ என்று தெரிவித்தார்.

பின்னர் பி.வி.சிந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான ஆண்டாகும். இதனால் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதாகும். தொடர்ந்து முழு உடல் தகுதியுடன் இருப்பதற்கும், ஒவ்வொரு போட்டியிலும் முழு திறமையை வெளிப்படுத்துவதற்கும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியமானதாகும். தற்போது எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்ளாமல் குறிப்பிட்ட போட்டி தொடர்களை தேர்ந்தெடுத்து பங்கேற்று வருகிறேன். ஏனெனில் காயமின்றி இருந்தால் தான் முழு உடல் தகுதியுடன் சிறப்பாக செயல்பட முடியும். எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே எனது இலக்காகும். உங்கள் அனைவருடைய (மக்கள்) ஆசியுடன் சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கத்தை வெல்ல முடியும் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.