Breaking News
4 நாடுகள் கிரிக்கெட்: இந்திய ஜூனியர் அணி ‘சாம்பியன்’ தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது

இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய ஜூனியர் அணிகள் (19 வயதுக்குட்பட்டோர்) பங்கேற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடந்து வந்தது.

இதில் டர்பனில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்கா முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் (0), திவ்யான்ஷ் சக்சேனா (6 ரன்), கேப்டன் பிரியம் கார்க் (2 ரன்) ஏமாற்றம் அளித்தாலும் பின்வரிசை வீரர்கள் அணியை தூக்கி நிறுத்தினர். விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 101 ரன்களும் (115 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), திலக் வர்மா 70 ரன்களும், சித்தேஷ் வீர் 48 ரன்களும் விளாசி சவாலான ஸ்கோருக்கு வித்திட்டனர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. ஜாக் லீஸ் (52 ரன்), ஜோனதன் பேர்டு (39 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

முடிவில் தென்ஆப்பிரிக்கா 43.1 ஓவர்களில் 190 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இ்ந்தியா 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது. சுழற்பந்து வீச்சாளர்கள் அதர்வா அங்கோல்கர் 4 விக்கெட்டுகளும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. துருவ் ஜூரெல் ஆட்டநாயகன் விருதையும், மொத்தம் 181 ரன்களுடன், 4 விக்கெட்டுகளும் எடுத்த திலக் வர்மா தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது.

அடுத்து ஜூனியர் உலக கோப்பைபோட்டி தென்ஆப்பிரிக்காவில் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. அதில் பங்கேற்க உள்ள இ்ந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் விளையாட உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.