Breaking News
சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலைபயங்கரவாதிகளுக்கு ‘சிம் கார்டு’ வழங்கியதாககாஞ்சீபுரத்தில் 6 பேர் சிக்கினர்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக கர்நாடக மாநிலம் உடுப்பி ரெயில் நிலையத்தில் அப்துல் ஷமிம், தவுபிக் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள்? என்பது குறித்து தமிழக ‘கியூ’ பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அந்த வகையில் அவர்கள் இருவருக்கும் காஞ்சீபுரத்தில் இருந்து செல்போன் ‘சிம் கார்டு’ சப்ளை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து காஞ்சீபுரத்தில் நேற்று முன்தினம் ‘கியூ’ பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். காஞ்சீபுரத்தில் உள்ள 3 செல்போன் கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த கடைகளில் இருந்து போலி முகவரி மூலம் பயங்கரவாதிகள் இருவருக்கும் ஏராளமான சிம் கார்டுகள் சப்ளை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையொட்டி அந்த 3 கடைகளின் உரிமையாளர்களையும், கடையில் பணியாற்றும் 3 ஊழியர்களையும் ‘கியூ’ பிரிவு போலீசார் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ஏற்கனவே சிம் கார்டு சப்ளை செய்ததாக பெங்களூருவைச் சேர்ந்த 3 பேர் மற்றும் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பன், ராஜேஷ், சேலத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், அன்பரசன் ஆகிய 7 பேரை ‘கியூ’ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு ஜெயநகர் பகுதியில் மெகபூப் பாஷா (வயது 45), முகமது மன்சூர் கான் ஆகிய 2 பயங்கரவாதிகளை பெங்களூரு மத்திய குற்றப் பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்த நிலையில், தமிழக ‘கியூ’ பிரிவு போலீசாரும், கர்நாடக போலீசாரும் தொடர்ந்து பயங்கரவாதிகள் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் அப்துல் ஷமிம், தவுபிக் ஆகியோருக்கு உதவிகள் செய்து அடைக்கலம் கொடுத்ததாக உசேன் செரீப் (36) என்பவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தமிழக ‘கியூ’ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தமிழக ‘கியூ’ பிரிவு போலீசார் பெங்களூரு சென்று உசேன் செரீப்பை கைது செய்தனர். அவர் உடனடியாக சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகு, எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் நேற்று முன்தினம் புழல் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இதுவரை தமிழக ‘கியூ’ பிரிவு போலீசார் பயங்கரவாதிகள் 10 பேரை கைது செய்து உள்ளனர். இந்த கும்பலுக்கு டெல்லியில் கைது செய்யப்பட்ட காஜா மொய்தீன் என்ற பயங்கரவாதிதான் தலைவராக செயல்பட்டதாக கருதப்பட்டது. ஆனால் உசேன் செரீப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காஜா மொய்தீனுக்கு மேல் இன்னொரு தலைவர் உள்ளதாகவும், அந்த தலைவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது.

மேலும் இவர்கள் புதிய மென்பொருள் (சாப்ட்வேர்) ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்து வந்து உள்ளனர். அந்த புதிய மென்பொருளில் உள்ள தகவல் பரிமாற்றத்தை தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ.) கூட கண்டுபிடிக்க முடியாது என்றும், ஒருவேளை அதை கண்டுபிடிக்க முற்பட்டால், அதில் உள்ள தகவல்கள் தானாக அழிந்துவிடும் வகையில் அந்த மென்பொருளை உருவாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புதிய தலைவர் யார்? அவர் எந்த நாட்டில் தங்கி உள்ளார்? என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இதுதொடர்பாக காஜா மொய்தீனிடம் விசாரிக்க ‘கியூ’ பிரிவு போலீசார் திட்டமிட்டு உள்ளனர். காஜா மொய்தீன் தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். குஜராத், டெல்லி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இவர்கள் பிடிபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதிகள் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

சமீபத்தில் பயங்கரவாதிகள் அமைப்புகள் தொடர்பாக தமிழக ‘கியூ’ பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளும், சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படும் என்றும், இதற்காக பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.