Breaking News
மதுக்கடைகளை மூட பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் அரசுக்கு, ஐகோர்ட்டு பரிந்துரை

டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதற்கு தடை விதிக்க கிராம சபைகளுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பாக மாறுபட்ட தீர்ப்பை ஐகோர்ட்டு மதுரை கிளை அமர்வுகள் வழங்கின. இதையடுத்து இந்த வழக்குகளை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், பி.டி.ஆதி கேசவலு ஆகியோர் கொண்ட முழு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மாநில தலைமை அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, அரசு தரப்பு கருத்தை கேட்டு தெரிவிக்க காலஅவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மது விற்பனை

பா.ம.க.வை சேர்ந்த வக்கீல் கே.பாலு ஆஜராகி, ‘தமிழகத்தில் 80 சதவீத மதுபான பார்கள் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் சட்டவிரோதமாக செயல்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலக்கு நிர்ணயம் செய்து ரூ.605 கோடிக்கு மதுபானங் களை டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. மராட்டிய மாநிலத்தில், மதுக்கடைகள் அமைக்க அனுமதி வழங்கும் அதிகாரத்தை கிராம சபைக்கு வழங்கி சட்டம் இயற்றியது போல, தமிழகத்திலும் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம்

மதுக்கடைகளை அமைக் கும் இடங்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை கிராம சபைக்கும், பஞ்சாயத்துக்கும் வழங்கும் விதமாக தமிழ்நாடு சில்லரை மது விற்பனை விதியில் திருத்தம் கொண்டு வந்தால் என்ன? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

இந்த கேள்வி எழுப்பி சுமார் 10 மாதங்களாகியும் அரசிடம் இருந்து பதில் வரவில்லை. அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனிமனிதனும் கண்ணியத்துடன் வாழ வழிவகை செய்கிறது. அந்த கண்ணியத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது. ஆனால் தமிழகத்தில் மது விற்பனையை அரசே மேற்கொள்கிறது. மக்கள் நலன் சார்ந்த அரசு, மக்களின் ஆரோக்கியம் சார்ந்த நலனையும் பேணி காக்க வேண்டும். மது அருந்துவது தனிமனித சுதந்திரமாக உள்ளது.

எனவே ஒட்டுமொத்த சமூக நலனில் அக்கறை கொண்டு டாஸ்மாக் மதுக்கடை வேண்டுமா?, வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை கிராம சபைகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கும் விதமாக ஏன் சட்டதிருத்தம் கொண்டுவரக்கூடாது?.

ஆலோசனை கூட்டம்

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களின் ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும். அந்த கூட்டங்களில் விரிவாக ஆலோசித்து அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு ஆலோசித்து முடிவெடுக்கும்போது அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள தனிமனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான ஷரத்துக்களையும் மனதில் வைத்து அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும்.

இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.