7 பேர் விடுதலை குறித்து எடுத்த முடிவை தெரிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

0

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர், பேரறிவாளன். இவர், சுப்ரீம் கோர்ட்டில் 2016-ம் ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர், ராஜீவ் காந்தியை கொல்ல பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக் கப்பட்ட பேட்டரி , தான் வாங்கி கொடுத்தது என்ற குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில், சி.பி.ஐ. தலைமையிலான பல்தரப்பு கண்காணிப்பு முகமை (எம்.டி.எம்.ஏ.) நடத்தி வருகிற விசாரணை முடிகிற வரையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று கோரி உள்ளார்.

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 14-ந் தேதி நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பெல்ட் வெடிகுண்டு குறித்த சி.பி.ஐ. அறிக்கை மிகவும் பழையதாக இருக்கிறது; தற்போதைய நிலவரம் குறித்து எதுவும் சேர்க்கப்படவில்லை. எனவே புதிதாக, தற்போதைய நிலவரத்தையும், சமீபத்தில் நடைபெற்ற விசாரணைகள் குறித்தும் விரிவான அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் பேரறிவாளன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், தீபக் குப்தா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.

பேரறிவாளன் தரப்பில் மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன், வக்கீல்கள் கவுதமன், பிரபு ராமசுப்பிரமணியம் ஆகியோர் ஆஜரானார்கள். சி.பி.ஐ. தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜரானார்.

விசாரணை தொடங்கியதும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்திடம் நீதிபதிகள், “2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கல் செய்த நிலவர அறிக்கைக்கும், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தாக்கல் செய்த நிலவர அறிக்கைக்கும் இடையே என்ன வித்தியாசம் உள்ளது என்பதை உங்களால் சொல்ல முடியுமா? எந்த வித்தியாசமும் இல்லை” என கூறினர்.

அதற்கு பிங்கி ஆனந்த், “இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எழுதப்பட்ட கடிதங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை. மீண்டும் கடிதங்கள் எழுதப்படுகின்றன” என்று கூறினார்.

தொடர்ந்து பேரறிவாளன் தரப்பில் மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் வாதிட்டார்.

அவர் தனது வாதத்தில், “பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். பெல்ட் வெடிகுண்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் அதன் விசாரணை முடிவடையும் வரை அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து அவரை விடுவிக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசும், கவர்னரும் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்ட நிலையிலும் அந்த உத்தரவின் மீது தமிழக அரசு முடிவு எடுத்தும், அது கவர்னரிடம் நிலுவையில் உள்ளது” என்று கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதின் அடிப்படையில், அரசியல் சாசனம் பிரிவு 161-ன்கீழ், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக எடுத்த முடிவை 2 வாரங்களில் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். (அரசியல் சாசனத்தின் பிரிவு 161, குற்றவாளி என கோர்ட்டால் தீர்ப்பு அளிக்கப்பட்ட ஒருவரை மன்னிக்க கவர்னருக்கு அதிகாரம் வழங்கி உள்ளது.)

7 பேரின் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. அது குறித்து இதுவரை கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை நீதிபதிகள் 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.