Breaking News
சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா நாளை கொண்டாட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடி ஏற்றுகிறார்

இந்தியாவின் அரசியல் அமைப்பு சாசனம் அமலுக்கு வந்த தினமான ஜனவரி 26-ந் தேதி, குடியரசு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு நாளை(ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தின விழா நடத்தப்படுகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விழாப் பகுதிக்கு காலை 7.55 மணிக்கு காரில் வந்திறங்குவார். அவரது காருக்கு முன்னும், பின்னும் போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து வருவார்கள்.

காரில் இருந்தபடி சாலையில் இருபுறமும் கூடியிருக்கும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கையசைத்து குடியரசு தின வாழ்த்துகளை அவர் தெரிவிப்பார். விழா மேடைக்கு வரும் அவரை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்.

8 மணிக்கு கொடியேற்றம்

அவரை தொடர்ந்து காலை 7.57 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் காரில் வந்திறங்குவார். விழா மேடைக்கு வரும் கவர்னரை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்.

விழா மேடைக்கு அருகே நடப்பட்டுள்ள உயரமான கம்பத்தில் காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்து அந்தப் பகுதியில் மலர் தூவும்.

அணிவகுப்பு

அதைத் தொடர்ந்து ராணுவம், கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பு நடத்தப்படும். பின்னர் போலீஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண்-பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை,

முப்படையின் தேசிய முதுநிலை மாணவர்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், சாரண-சாரணியர் மாணவ மாணவிகளின் அணிவகுப்பும், அவர்களது இசைக்குழுவினரின் அணிவகுப்பும் நடைபெறும். இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொள்வார்.

பதக்கங்கள்

அதைத் தொடர்ந்து, வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார். கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், கள்ளச் சாராயத்தை தடுப்பதில் சீரிய பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் முதல்-அமைச்சர் வழங்குவார்.

இந்த விழாவையொட்டி கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீற்றிருக்கும் மேடையின் முன்பு, பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவிகள் வண்ண வண்ண உடையணிந்து நடனம் ஆடி திறமையை வெளிப்படுத்துவர்.

தமிழக அரசு துறைகள் சார்பாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடத்தப்படும். இதில் சிறப்பாக செயல்பட்ட துறைக்கு பரிசு வழங்கப்படும். சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய பள்ளி, கல்லூரிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

பங்கேற்போர்

இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் பி.தனபால், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள், அமைச்சர்கள், அரசு செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பல நாட்டு தூதரக அதிகாரிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.