Breaking News
சென்னையில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்படும் – சாலையில் வரும் வாகனங்கள் பறிமுதல்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 5-வது கட்டமாக வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நேற்று முன்தினம் முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எனினும், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், பால் விற்பனை நிலையங்கள் திறந்து இருந்தன. மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் குறைந்த அளவு பணியாளர்களுடன் செயல்பட்டன.

முழு ஊரடங்கு உத்தரவின் 2-வது நாளான நேற்று ஒரு சில வாகனங்களே சாலைகளில் சென்றன. அதாவது, நேற்று சனிக்கிழமை என்பதால் பல தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் விடுப்பு விடப்பட்டதால் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது. அரசு வாகனங்கள், மருந்து, மருத்துவமனைக்கு செல்வதற்கான வாகனங்கள் மட்டுமே இயங்கின.

ஒரு சில தனியார் நிறுவனங்கள் இயங்கின. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்காக பெறப்பட்ட சிறப்பு இ-பாசை ஊழியர்கள் கைகளில் வைத்து இருந்தனர். இந்த சிறப்பு இ-பாஸ் இல்லாதவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை அண்ணா சாலை, வாலாஜா சாலை, மெரினா கடற்கரை சாலை, புரசைவாக்கம், பெரம்பூர் என சென்னை முழுவதும் 288 இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

போலி இ-பாஸ்

அண்ணா சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்ட போது, தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் நபர் ஒருவர் வந்தார். ஆனால், அவர் உரிய சிறப்பு இ-பாஸ் வைத்திருக்கவில்லை. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது வாகனத்தை பறிமுதல் செய்தனர். இ-பாஸ் காண்பிப்பவர்களிடமும் அவர்களது அடையாள அட்டையை வாங்கி உண்மையான இ-பாஸ் தானா? என்று போலீசார் சோதனை செய்தபின்னரே வாகனங்களை அங்கு இருந்து புறப்பட அனுமதித்தனர். காரணம், பலர் போலி இ-பாஸ் பயன்படுத்துவதை போலீசார் கண்டறிந்து உள்ளனர்.

போலீசார் இவ்வளவு கிடுக்கு பிடி சோதனை மேற்கொண்ட போதும், ஒரு சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் பாய்ந்து சென்றதையும் பார்க்க முடிந்தது. மோட்டார் சைக்கிளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயணித்தாலோ, முகக்கவசம் இன்றி பயணித்தாலோ, எந்த விதமான தவறுகள் என்றாலும், அனைத்தும் தற்போது மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 179 படி ஒழுங்கீன மீறல் என்று வழக்குப்பதிவு செய்து ரூ.500 அபராதம் விதித்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தீவிர முழு ஊரடங்கு

இந்த நிலையில், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீவிர முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. அதாவது, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மளிகை கடைகள், காய்கறி கடைகளும் முற்றிலும் அடைக்கப்படும். பால் நிலையங்கள் மற்றும் மருந்து கடைகள் மட்டும் திறந்து இருக்கும்.

எனவே, தேவையின்றி வெளியில் வரும் மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.