Breaking News
சீன நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா?ஐ.பி.எல். நிர்வாகம் அடுத்த வாரம் ஆலோசனை

லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் கடும் உயிர்சேதம் நிகழ்ந்தது.

எல்லையில் தொடர்ந்து சீனா வாலாட்டி வருவதால் அவர்கள் மீது இந்தியர்களுக்கு தற்போது கடும் கோபமும், அதிருப்தியும் ஏற்பட்டு உள்ளது. ‘சீன பொருட்களை புறக்கணிப்போம், உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவோம்’ என்ற கோஷம் இந்தியா முழுவதும் பலமாக எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரியமும் ஒரு சில சீன நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளது. குறிப்பாக சீனாவைச் சேர்ந்த விவோ செல்போன் நிறுவனம் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் டைட்டில் ஸ்பான்சராக இருக்கிறது. இந்த ஒப்பந்தம் 2022-ம் ஆண்டு வரை நீள்கிறது. இதன்படி ஆண்டுக்கு ரூ.440 கோடியை விவோ, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்குகிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘எல்லையில் நடந்த சண்டையில் துணிச்சல்மிக்க நமது இந்திய வீரர்களின் உயிர்தியாகத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். இதையடுத்து ஐ.பி.எல். போட்டிக்கான பல்வேறு விளம்பர ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது குறித்து ஆலோசிக்க அடுத்த வாரத்தில் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூடுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் கூறுகையில், ‘இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து சீன நிறுவனம் பணம் சம்பாதிக்கிறது. இதில் ஒரு பங்கை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஸ்பான்சர்ஷிப் வகையில் வழங்குகிறது. அவர்களிடம் இருந்து பெறும் பணத்திற்கு கிரிக்கெட் வாரியம் 42 சதவீதத்தை வரியாக அரசாங்கத்திற்கு செலுத்துகிறது. எனவே இது நம் நாட்டுக்கு சாதகமானதே தவிர சீனாவுக்கு அல்ல. இந்த பணத்தை நாம் பெறாவிட்டால் அது சீனாவுக்கே சென்று விடும். வருங்காலத்தில் விளம்பர ஒப்பந்தம் செய்யும் போது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவோம்’ என்றார்.

இதற்கிடையே வர்த்தக மற்றும் தொழில் மைய கன்வீனர் பிரிஜேஷ் கோயல் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘சீன நிறுவனங்கள் உடனான விளம்பர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் உடனடியாக முறித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் ஐ.பி.எல். போட்டி மற்றும் உள்நாட்டில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிப்பார்கள்’ என்று எச்சரித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.