Breaking News
சென்னையில் 4 மடங்கு காற்று மாசு உயர்வு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை,

தமிழக தலைநகரான சென்னை இந்திய அளவில் 4 முக்கிய மெட்ரோபாலிடன் நகரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. குறைந்த பரப்பளவு, அதிக மக்கள் நெருக்கடி நிறைந்த நகராக உள்ள சென்னையில் வாகன போக்குவரத்து, தொழிற்சாலைகள் ஆகியவற்றால் காற்று மாசு தரம் கேள்வி குறியாகவே திகழ்கிறது.

இதனால் மக்களின் வாழ்க்கை தரம் ஊசலாட்டம் காணுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் அலை, அதன் தீவிரம் மற்றும் 2வது அலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளே அதிக இலக்காகின.

சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களே அதிகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைளை கொண்டிருந்தன. இந்த நிலையில், ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி என்ற அமைப்பு சென்னையில் திரிசூலம், பாரிமுனை, காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் அனல் மின்நிலையம் அருகில் உள்ள செப்பாக்கம், வேளச்சேரி, தி.நகர் உள்ளிட்ட 20 இடங்களை ஆய்வுக்கு உட்படுத்தியது.

இதன்படி, கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 24 மணி நேர தொடர் காற்று தர பரிசோதனையை நடத்தியது.

ஒரு கனமீட்டர் காற்றில் 2.5 மைக்ரான் அளவு கொண்ட காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு (PM 2.5) 60 மைக்ரோ கிராம் வரை இருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால் இந்த ஆய்வில் அனுமதிக்கப்பட்ட மாசு அளவை விட 4 மடங்கு அதிகமாக மாசு பதிவாகி இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இவற்றில் அதிக அளவாக, திரிசூலம், பாரிமுனை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் 176 மைக்ரோ கிராம் முதல் 228 மைக்ரோ கிராம் வரை காற்று மாசு இருந்தது.

இதேபோன்று, திருவொற்றியூர், காசிமேடு (துறைமுகம் அருகே), துரைப்பாக்கம் (குப்பை கொட்டும் வளாகம் அருகில்), குருவிமேடு (அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பல் குளம் அருகே), சோழிங்கநல்லூர் (பழைய மகாபலிபுரம் நெடுஞ்சாலை அருகில்), வேளச்சேரி, நொச்சிக்குப்பம், கொடுங்கையூர் (குப்பை கொட்டும் வளாகம்அருகில்), மீஞ்சூர், உர்ணாம்பேடு, செப்பாக்கம் (நிலக்கரி சாம்பல் குளம் அருகே) பெரும்புதூர், தியாகரயநகர், அத்திப்பேடு, காட்டுக்குப்பம், அம்பத்தூர் ஆகியஇடங்களில் பிஎம் 2.5 மாசு 59 முதல் 128 மைக்ரோகிராமாக இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. காட்டுப்பள்ளி குப்பத்தில் 53 மைக்ரோ கிராமாக இது இருந்தது.

இந்த ஆய்வு முடிவுகளை பார்க்கும்போது, இது அமெரிக்க காற்று தர நிர்ணய விதிகளின்படி ஆரோக்கியமற்ற நிலையாகும். இப்பகுதியில் வாழும், இதய அல்லது நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள், வயதானவர்கள், சிறார்கள் உடல் ரீதியான செயல்பாடுகளை அதிகம் மேற்கொள்ள கூடாது என அந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி காற்று தர கண்காணிப்பில் ஈடுபட்ட ஆய்வாளர் விஸ்வஜா சம்பத் கூறும்போது, நிலக்கரியை எரிப்பதால் பெறப்படும் மின் பயன்பாட்டை குறைப்பது, போக்குவரத்து போன்றவற்றில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் காற்று மாசுவையும், அதனால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளையும் குறைக்க முடிவும். சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வலுவான உள்ளூர் காற்று தர கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த ஆண்டு காற்று மாசுபாட்டால் 11 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர் என கிரீன்பீஸ் தென்கிழக்கு ஆசியா அமைப்பின் ஆய்வு முடிவு தெரிவித்து உள்ளது.

இதேபோன்று சென்னையில் காற்று மாசு தொடர்புடைய பொருளாதார இழப்பும் ரூ.10,910 கோடியாக உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால், சென்னை பெருநகரில் காற்றின் மாசு அதிகரித்து இருப்பது, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு மற்றொரு மறைமுக கேள்விக்குறியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.