Breaking News
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்: பார்சிலோனாவை 0-4 என வீழ்த்தியது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி- ஏஞ்சல் டி மரியா அசத்தல்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனோ அணி 0-4 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

பாரிஸ் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி நட்சத்திர வீரரரான ஏஞ்சல் டி மரியா ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். 44-வது நிமிடத்தில் ஜூலியன் டிராக்ஸ்லெர் அசத்தலாக கோல் அடிக்க முதல் பாதியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 2-0 என முன்னிலை பெற்றது.

2-வது பாதியில் ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியா தனது 2-வது கோலை அடித்தார். இதனால் பார்சிலோனா அணி அதிர்ச்சியில் உறைந்தது. பார்சிலோனா அணி கடுமையாக போராடியபோதும் கோல்கள் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 73-வது நிமிடத்தில் செயின்ட் ஜெர்மைன் அணி தனது 4-வது கோலை அடித்தது. இந்த கோலை கவானி அடித்தார்.

லயோனல் மெஸ்ஸி, நெய்மர், இனியஸ்டா, லூயிஸ் சுவாரெஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இருந்தபோதும் செயின்ட் ஜெர்மைன் அணி வீரர்களின் தடுப்பு அரண்களை மீறி பார்சி லோனா அணியால் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது. முடிவில் செயின்ட் ஜெர்மைன் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரு கோல்கள் அடித்த ஏஞ்சல் டி மரியாவுக்கு இந்த ஆட்டத்தின் வெற்றி சிறந்த பிறந்த நாள் பரிசாக அமைந்தது. அவர் நேற்று முன்தினம் 29-வது வயதை எட்டி னார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தோல்வியால் பார்சி லோனா அணி கடும் அதிர்ச்சி யடைந்தது. அந்த அணி கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் அணிக்கு எதிராக சராசரி கோல்கள் விகிதப்படி 0-7 என தோல்வியடைந்தது. அதன் பின்னர் பார்சிலோனா அணிக்கு ஏற்பட்ட தற்போதைய தோல்வியான இது பெரிய அவமானமாக கருதப்படுகிறது.

இந்த தோல்வியால் சாம்பியன் லீக் தொடரில் கால் இறுதிக்கு முன்னதாக வெளியேற்றப்படும் முதல் நட்சத்திர அணி என்ற சூழ்நிலைக்கு பார்சிலோனா தள்ளப்பட்டுள்ளது. இதில் இருந்து பார்சிலோன அணி மீள வேண்டும் என்றால் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு எதிரான 2-வது கட்ட ஆட்டத்தில் பெரிய அளவிலான கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

முதல் கட்ட ஆட்டத்தில் செயின்ட் ஜெர்மைன் அணி 4-0 என வெற்றி பெற்றுள்ளதால். 2-வது கட்ட ஆட்டத்தில் பார்சி லோனா அணி இதைவிட அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அடுத்த சுற்றில் கால்பதிக்க முடியும். பார்சிலோனா அணியின் தலைவிதியை நிர்ணயிக்கும் இந்த ஆட்டம் அடுத்த மாதம் 9-ம் தேதி ஸ்பெயினில் உள்ள கேம்ப் நவ் நகரில் நடைபெறுகிறது.

நன்றி : தி இந்து தமிழ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.