Breaking News
ஒமைக்ரான் பரவல்: சர்வதேச விமான சேவை தடை நீடிப்பு..!!
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக சர்வதேச பயணிகள் விமான சேவைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க ‘வந்தேபாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. மேலும் பல்வேறு நாடுகளுடன் இரு தரப்பு உடன்பாடுகள் செய்து கொண்டு இதுபோன்ற விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் வழக்கமான பயணிகள் விமான சேவை தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை கிட்டத்தட்ட கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்ட நிலையில், வழக்கமான சர்வதேச பயணிகள் விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியா தயாரானது. வரும் 15-ந் தேதி முதல் சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு (ஒமைக்ரான்) கண்டறியப்பட்டுள்ளது. இது அதிபயங்கர வைரஸ் என கருதப்படுவதால் பல நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. எனவே சர்வதேச விமான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டத்தை மறு ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளை பிரதமர் மோடி கடந்த 27-ந் தேதி அறிவுறுத்தி உள்ளார்.
அதைத் தொடர்ந்து திட்டமிட்டிருந்தபடி சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்காமல் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த சுற்றறிக்கையை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதில், “கவலைக்குரியதாக அமைந்துள்ள உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ள உலகளாவிய சூழலில், சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசித்து நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. திட்டமிட்ட சர்வதேச பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான தேதியைக் குறிக்கும் பொருத்தமான முடிவு, சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே திட்டமிட்டபடி வரும் 15-ந் தேதி முதல் வழக்கமான சர்வதேச பயணிகள் விமான சேவை தொடங்காது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.