Breaking News
தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி; பள்ளிகளுக்கே சென்று செலுத்த ஏற்பாடு
ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் ஒமைக்ரான் குறித்த அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.
3-ந்தேதி முதல் தடுப்பூசி
கொரோனாவை வெல்லும் பேராயுதமான தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்றுகூட 16-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.
இதற்கிடையே 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு ஜனவரி 3-ந்தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதேபோல் ஜனவரி 10-ந்தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மோடி அறிவித்தார்.
அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குவது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பேட்டி அளித்தார்.
சென்னை அடையாறு மசூதி காலனியில் நடந்த 16-வது மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
33 லட்சம் சிறுவர்களுக்கு
தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 33 லட்சத்து 20 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஜனவரி 3-ந்தேதியே இவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை சைதாப்பேட்டை மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்க இருக்கிறோம்.
அன்றே தமிழகம் முழுவதும் 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கும். அதேபோல், தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடியே 4 லட்சம் பேருக்கும், முன்கள பணியாளர்கள் 9 லட்சத்து 78 பேருக்கும் ஜனவரி 10-ந்தேதி முதல் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்படும்.
பள்ளிகளுக்கே சென்று செலுத்த ஏற்பாடு
‘15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்படும்.
‘கோவேக்சின்’ தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை செலுத்திக்கொள்ளலாம் என்பதால், 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘கோவேக்சினை’ பொறுத்தவரை 29 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. ஜனவரி 3-ந்தேதி வரை 7 முதல் 8 லட்சம் தடுப்பூசிகள் செலவாகிவிடும். மீதி 22 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும்.
அந்தவகையில் தமிழகத்தில் 33 லட்சம் பேர் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் இருக்கிறார்கள். எனவே இன்னும் கூடுதலாக 10 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். முழுவீச்சில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஜனவரி 3-ந்தேதி முதல் தொடங்கப்படும்.
சென்னையில் கூடுதலாக தடுப்பூசி
தமிழகத்தில் இதுவரை 8 கோடியே 34 லட்சத்து 60 ஆயிரத்து 758 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 84.87 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 55.85 சதவீதம் பேர் 2-ம் தவணை தடுப்பூசியையும் செலுத்தி உள்ளனர். கையிருப்பில் 80 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. ஏறத்தாழ 95 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர்.
அவர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அவர்கள் அனைவரும் தயக்கம் இல்லாமல் 2-வது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். 78 லட்சம் மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட 55 லட்சத்து 30 ஆயிரத்து 900 பேர் உள்ளனர்.
சென்னையில் முதல் தவணை தடுப்பூசியை மாநில அளவிலான சதவீதத்தை காட்டிலும் கூடுதலாக 89 சதவீதம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசியை மாநில அளவிலான சதவீதத்தை காட்டிலும் கூடுதலாக 66 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 34 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 22 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல் ஒமைக்ரான் அறிகுறி என்ற சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர்.
இந்தியாவிலேயே கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதில் தமிழகம் முதல் மாநிலமாக இருந்து கொண்டிருக்கிறது. அதன்படி 6 லட்சத்து 18 ஆயிரத்து 700 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.