Breaking News
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

சென்னை,

மத்திய அரசு துறைகள் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். வழிநெடுக அவருக்கு பா.ஜ.க.வினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மேலும் மாற்று ஏற்பாடும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு அவர் செல்ல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நேரு ஸ்டேடியத்துக்கு 5.45 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இரவு 7 மணி வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத்திட்டங்களை அவர் தொடங்கிவைத்து பேசுகிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்து உள்ளார். 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 5 கூடுதல் கமிஷனர்கள், 8 இணை கமிஷனர்கள், 29 துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கமாண்டோ படை வீரர்கள், ஆயுதப்படை வீரர்களும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சென்னை விமான நிலையம், ஐ.என்.எஸ்.

அடையார், நேரு உள்விளையாட்டு அரங்கம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ள பெரியமேடு பகுதி பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் நேரு உள்விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள பெரியமேடு பகுதியைச் சுற்றியுள்ள ஈ.வெ.ரா சாலை, தாஷ்பிரகாஷ் முதல் சென்னை மருத்துவக்கல்லூரி வரையிலான சாலையில் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா சாலை, எஸ்.பி படேல் சாலை, ஜி.எஸ்.டி சாலை ஆகியவற்றில் போக்குவரத்து இயக்கம் மந்தமாக நடைபெறும் என்பதால் வாகன ஓட்டிகள் மாற்று சாலைகளை பயன்படுத்திக் கொள்ளவும் மாற்று வழிகளில் செல்ல முன்கூட்டியே திட்டமிடுமாறும் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.