Breaking News
சென்னையில் 54 சதவீத குற்றங்கள் குறைந்தன கமிஷனர் எடுத்த நடவடிக்கைகளுக்கு அதிரடி பலன்

சென்னை நகரில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எடுத்த குற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிரடி பலன் கிடைத்துள்ளதாகவும், இதனால் சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் 54 சதவீத குற்றங்கள் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை தலைமையக கூடுதல் கமிஷனர் சேஷசாயி, கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் மணி ஆகியோர் கூட்டாக நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

சென்னையில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் குற்றங்களை குறைப்பதற்காக சில குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை அதிரடியாக எடுக்கும்படி உத்தரவிட்டார். அவரது உத்தரவு மற்றும் ஆலோசனைகளின்படி, சில நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதில் முக்கியமாக கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் விவரங்களை முழுவதுமாக சேகரித்தோம்.

கடந்த ஒரு மாதமாக இந்தப்பணி நடந்தது. கடந்த 5 ஆண்டுகளில் நடந்த குற்றச்செயல்களில் தொடர்புள்ள குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியலை அவர்களின் புகைப்படம், முகவரி மற்றும் அவர்கள் மீதான வழக்கு நிலுவையில் உள்ள போலீஸ் நிலையங்கள் விவரம் போன்றவற்றை சேகரித்தோம்.

குற்றவாளிகள் எண்ணிக்கை
அவ்வாறு சேகரித்ததில் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 551 ஆகும். இதில் சென்னையில் வசிப்போரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 303 பேர். மீதியுள்ள 3 ஆயிரத்து 248 பேர் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

சென்னையை சேர்ந்த குற்றவாளிகள் எங்கு வசிக்கிறார்களோ? அதன் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு பெயர்ப்பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் அதன் எல்லையில் வசிக்கும் குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்தந்த போலீஸ் நிலையங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இந்தவகையில் சென்னையில் உள்ள 127 போலீஸ் நிலையங்களிலும் அந்த போலீஸ் நிலைய எல்லைக்குள் வசிக்கும் குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியல் முழுவதுமாக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்காணிப்பு
இந்த குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியல் ரோந்து செல்லும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரோந்து செல்லும் போலீசார் அவர்கள் எல்லையில் வசிக்கும் குற்றவாளிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். குற்றவாளிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நேரடியாக சந்தித்து கவுன்சிலிங் முறையில் அறிவுரைகள் வழங்கப்பட்டன. இனிமேல் குற்ற செயல்களின் ஈடுபடக்கூடாது என்று எடுத்துரைக்கப்பட்டது.

வாரண்டு பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டனர். நவம்பர் 1–ந்தேதி முதல் இந்த கண்காணிப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டது.

குற்றங்கள் குறைந்தன
இந்த கண்காணிப்பு நடவடிக்கையால் அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் 54 சதவீத குற்றங்கள் குறைந்து உள்ளன. அந்தவகையில் அக்டோபர் மாதம் 13 கொலைகள் நடந்துள்ளன. நவம்பர் மாதத்தில் கொலைக்குற்றங்கள் 5 ஆக குறைந்து விட்டது. ஆதாயக்கொலை அக்டோபரில் ஒன்று நடந்துள்ளது. நவம்பரிலும் ஆதாயக்கொலை ஒன்று தான் பதிவாகியுள்ளது. பெரிய அளவிலான கூட்டுக்கொள்ளை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கவில்லை. சிறிய அளவிலான கொள்ளை சம்பவங்கள் அக்டோபர் மாதம் 11 நடந்துள்ளது. நவம்பரில் அது 4 ஆக குறைந்துள்ளது.

பகலில் வீடு புகுந்து திருடும் சம்பவம் அக்டோபரில் 27 நடந்துள்ளது. நவம்பரில் அது 4 ஆக குறைந்துவிட்டது. இரவில் வீடு புகுந்து திருடும் சம்பவம் அக்டோபரில் 41 ஆக பதிவாகியிருந்தது. நவம்பரில் 17 சம்பவங்கள் தான் நடந்துள்ளன. சங்கிலி பறிப்பு அக்டோபரில் 61 சம்பவங்களும், நவம்பரில் 39 சம்பவங்களும் அரங்கேறி உள்ளது.

வாகன திருட்டுகள் சம்பந்தமாக அக்டோபரில் 122 வழக்குகள் பதிவாகியுள்ளன. நவம்பரில் அந்த வழக்குகள் 69 ஆக குறைந்துவிட்டது. இதர திருட்டு சம்பவங்கள் அக்டோபரில் 93 ஆக இருந்தது. நவம்பரில் 53 ஆக குறைந்துவிட்டன. மொத்தமாக அக்டோபர் மாதம் 384 குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன. நவம்பரில் அது 209 ஆக வெகுவாக குறைந்துவிட்டன. அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நவம்பரில் 175 குற்றங்கள் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. அந்தவகையில் பார்த்தால் குற்ற சம்பவங்கள் 54 சதவீதம் நவம்பர் மாதம் குறைந்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள்

போலீஸ் கமிஷனரின் இந்த நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது. எனவே இந்த கண்காணிப்பு நடவடிக்கை தொடரும். தொடர்ந்து அடுத்த 6 மாதங்கள் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்படும். குற்றங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கும் சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அந்தவகையில் சென்னையில் 27 ஆயிரத்து 728 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 20 ஆயிரத்து 995 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன. மீதியுள்ள 6 ஆயிரத்து 733 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது.

தனி சாப்ட்வேர் மூலம்…

தற்போது தயாரிக்கப்பட்டு உள்ள குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியல் தனி சாப்ட்வேர் மூலம் செல்போன்களில் இணைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் குற்றவாளிகள் பெயர் மற்றும் விவரங்களை செல்போன் மூலமே பார்த்து தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.