Breaking News
மாநிலம் முழுவதும் 4.25 லட்சம் லாரிகள் 3-வது நாளாக வேலைநிறுத்தம்: டேங்கர் லாரிகளும் நாளை முதல் ஸ்டிரைக் – அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

சமையல் எரிவாயு லாரி உரிமை யாளர்கள் 3-ம் தேதி (நாளை) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தன்ராஜ் தெரிவித்தார்.

டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும், வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்து வதில் விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய லாரி உரிமை யாளர்கள் சங்கத்தினர் கடந்த 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள் ளனர். நேற்று 3-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது.

இதனால், மாநிலம் முழுவதும் 4.25 லட்சம் லாரிகள் இயக்கப் படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளன. இந்நிலையில், சேலத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில், தென் மண்டல லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் கோபால்நாயுடு (ஆந்திரா) தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சண்முகப்பா (கர்நாடகா), மாநில லாரி உரிமை யாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலாளர் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு பின் தன்ராஜ், நிருபர்களிடம் கூறிய தாவது:

லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதற்கு பதிலாக சங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக, சிலரை தூண்டி விட்டு, எங்களது போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட் டுள்ளனர்.

எங்கள் போராட்டத்துக்கு சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 3-ம் தேதி (நாளை) முதல் சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் எங்களுக்கு ஆதரவாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடு கின்றனர். இதனால், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும்.

தமிழக அரசு சுமூக தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், போராட்டத்தைத் தீவிரப்படுத்தி, மாவட்டம்தோறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசின் கவனத்தை ஈர்ப்பது எனவும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

லாரிகள் வேலை நிறுத்தத்தால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலைகள் அதிகரித்துள்ளன.

கோயம்பேட்டில் கடந்த வார விலையுடன் ஒப்பிடும் போது, ஒரு கிலோ பீன்ஸ் ரூ.20 உயர்ந்து ரூ.65-க்கும், கேரட் ரூ.18 உயர்ந்து ரூ.50-க்கும், தக்காளி ரூ.5 உயர்ந்து ரூ.25-க்கும், கத்தரிக்காய் ரூ.15 உயர்ந்து ரூ.40-க்கும், வெங்காயம் ரூ.5 உயர்ந்து ரூ.15-்கும் விற்கப்படுகிறது. வேலைநிறுத்தத்தில். காய்கறி லாரிகளும் பங்கேற்றால் விலை மேலும் உயரக்கூடும்

இதுகுறித்து கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச்சங்க துணைத் தலைவர் பி.சுகுமார் கூறியபோது, ‘‘வறட்சி மற்றும் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நேற்றைய நிலவரப்படி 250 லாரிகள் மட்டுமே வந்தது. இதனால் காய்கறி விலை உயர்ந்துள்ளது. இதுவரை காய்கறி லாரிகள் அதிக அளவில் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அவையும் பங்கேற்றால், காய்கறி தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விலையும் கடுமை யாக உயரும்’’ என்றார்.

Keywords: 4.25 லட்சம் லாரிகள், 3-வது நாளாக வேலைநிறுத்தம், டேங்கர் லாரிகள், நாளை முதல் ஸ்டிரைக், அத்தியாவசிய பொருட்கள், விலை உயரும் அபாயம்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.