Breaking News
உயிரித் தொழில் நுட்பம் படித்தால் உடனடி வேலை!

நன்மை தரும் நுண்ணுயிரிகளை அடிப்படையாகக்கொண்டு வேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்துறைகளில் உயிரித் தொழில்நுட்பம் பயன்படுகிறது. 1970 ஆம் ஆண்டிலிருந்து இத்தொழில்நுட்பம் உலகம் முழுவதும் செல்வாக்கு பெற்றுவருவதால், இந்தியாவிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், பல்வேறு கல்லூரிகளிலும் உயிரித் தொழில்நுட்பப் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.

படிப்புகள்: இந்தியாவில் உயிரித் தொழில்நுட்பம் குறித்த படிப்புகளில் உயிரி அறிவியல் (Bio Science), உயிரி வேதியியல் (Bio Chemistry), உயிரித் தொழில்நுட்பம் (Bio Technology), உயிரித் தகவல்கள் (Bio Informatics), உயிரி மருத்துவம் (Bio Medical), உயிரிப் பொறியியல் (Bio Engineering) எனும் பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்புகளும் (B.Sc. / B.E or B.Tech), முதுநிலைப் பட்டப்படிப்புகளும் (M.Sc / M.Tech) உள்ளன.

முதுநிலைப் பட்டப்படிப்புகளில் தற்போது தொழிற்சாலை உயிரித் தொழில்நுட்பம் மருந்தாளுமைத் தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவப் பொறியியல் போன்ற சில சிறப்புப் பாடங்களுடனான முதுநிலைப் பட்டப்படிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன.

சில கல்லூரிகளில் உயிரி அறிவியல், உயிரித் தகவல்கள் மற்றும் உயிரித் தொழில்நுட்பப் பாடங்களில் ஐந்தாண்டு அளவிலான ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புகள் (M.Sc / M.Tech) இடம்பெற்றிருக்கின்றன. இதுபோல் இரட்டைப் பட்டப்படிப்பு (Dual Course) முறைகளிலும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் உள்ளன.

உயிரித் தொழில்நுட்பம் குறித்த ஆய்வுப் படிப்புகளாக உயிரி அறிவியல் மற்றும் உயிரித் தகவல்கள் பாடங்களில் எம்.பில். மற்றும் பிஹெச்.டி பட்டப்படிப்புகளும், உயிரித் தொழில்நுட்பம், உயிரித் தகவல்கள், உயிரி மருத்துவப் பொறியியல் பாடங்களில் பிஹெச்.டி பட்டப்படிப்புகளும் உள்ளன. சில கல்லூரிகளில் உயிரி அறிவியல், உயிரித் தொழில்நுட்பம் குறித்த முதுநிலைப் பட்டயப் படிப்பும், சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

கல்வித் தகுதிகள்: உயிரித் தொழில்நுட்பப் படிப்புகளில் சேர, பிளஸ் டூவில் அறிவியல் கற்றிருப்பது பொதுத் தகுதி.

இளநிலைப் பட்டப்படிப்பு: மூன்று ஆண்டு அளவிலான உயிரித் தொழில்நுட்பம், உயிரி அறிவியல், உயிரித் தகவல்கள் (B.Sc) இளநிலைப் பட்டப்படிப்பிற்கு பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (PCB) பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி தேவை. நான்கு ஆண்டு அளவிலான உயிரித் தொழில்நுட்பம், உயிரி மருத்துவம் மற்றும் உயிரிப் பொறியியல் (B.Tech) இளநிலைப்பட்டப்படிப்பிற்கு பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல் உயிரியல் மற்றும் கணிதம் (PCBM) பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி தேவை. சில மாநிலங்களில் அரசு இட ஒதுக்கீட்டு நடைமுறைகளுக்கேற்ப மதிப்பெண்தளர்வும் உண்டு.

முதுநிலைப் பட்டப்படிப்பு: இரண்டு ஆண்டு அளவிலான உயிரி அறிவியல், உயிரித் தகவல்கள், உயிரித் தொழில்நுட்பம் போன்ற அறிவியல் (M.Sc) முதுநிலைப் பட்டப்படிப்பிற்குத் தொடர்பான பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் தேவை. உயிரித் தொழில்நுட்பம், உயிரிப் பொறியியல் மற்றும் உயிரித் தகவல்கள் (M.Tech) முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு 60% மதிப்பெண்களுடன் பொறியியலில் இளநிலைப் பட்டம் (B.E/B.Tech) (அ) உயிரி அறிவியல், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தகவல்கள் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.Sc) தேவை.

ஆய்வுப் படிப்புகள்: உயிரி அறிவியல், உயிரித் தகவல்கள், உயிரித் தொழில்நுட்பம் போன்ற அறிவியல் பாடத்தில் எம்.பில் மற்றும் பிஹெச்.டி போன்ற ஆய்வுப் படிப்புகளுக்குத் தொடர்புடைய பாடத்தில் முதுநிலைப் பட்டம் அவசியம். உயிரித் தொழில்நுட்பம், உயிரிப் பொறியியல் போன்ற பொறியியல் பாடத்தில் பிஹெச்.டி பட்டப்படிப்பிற்குத் தொடர்புடைய பாடங்களில் முதுநிலைப்பட்டம் (M.E/M.Tech) தேவை.

முதன்மைக் கல்வி நிறுவனங்கள்: உயிரித் தொழில்நுட்பம் குறித்த படிப்புகளைத் திருவனந்தபுரத்திலுள்ள Rajiv Gandhi Centre for Biotechnology, மொகாலியிலுள்ள National Institute of Pharmaceutical Education and Research, அரியானா மாநிலம் கர்னலிலுள்ள National Dairy Research Institute, Karnal, IIT, National Institute of Technology ஆகிய சிறந்த கல்வி நிறுவனங்களில் கற்கலாம்.

மாணவர் சேர்க்கை: உயிரி அறிவியல், உயிரித் தகவல்கள், உயிரித் தொழில்நுட்பம் போன்ற அறிவியல் (B.Sc) இளநிலைப் பட்டப்படிப்பில் சேர, பிளஸ் டூ மதிப்பெண்களே அடிப்படை. உயிரித் தொழில்நுட்பம், உயிரித் தகவல்கள் மற்றும் உயிரிப் பொறியியல் (B.Tech) இளநிலைப் பட்டப்படிப்பிற்கு IIT,NIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பிளஸ் டூ மதிப்பெண்களுடன் இணை நுழைவுத் தேர்வு (முதன்மை) (JEE (Main)) தேர்வு மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றன.

உயிரி அறிவியல், உயிரித் தொழில்நுட்பம் ஆகிய முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகளுண்டு. உயிரி அறிவியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் குறித்த அறிவியல் ஆய்வுப் படிப்புகளுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் அறிவியல் தொடர்புடைய பாடங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு(NET) அடிப்படையிலும், உயிரித் தொழில்நுட்பம் குறித்த பொறியியல் ஆய்வுப் படிப்புகளுக்குத் தனி நுழைவுத் தேர்வுகள் வழியாகவும் மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றன.

வேலைவாய்ப்புகள்: வேளாண்மைத்துறையில் தாவரங்களில் மரபணு மாற்றம் செய்வதன் மூலம், நோய், வறட்சி, பூச்சி போன்றவற்றைச் சமாளித்து உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்திடவும், வணிகரீதியாக அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் வைத்திருக்க உயிரித் தொழில்நுட்பம் உதவுகிறது.

மருத்துவத் துறையில் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்துகள் உருவாக்குதல், மரபு நோய்களிலிருந்து விடுபட மரபணு சிகிச்சை முயற்சிகள், மனித உடல்களில் சுரப்பிகளின் குறைபாடுகளை நீக்க உதவுதல் போன்றவைகளுக்கு உயிரித் தொழில்நுட்பம் உதவுகிறது. இதேபோல் சுற்றுச்சூழல் துறைகளில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் மாசடைந்த நிலம், நீர்நிலைகள், காற்று ஆகியவற்றை மீட்டெடுக்க உயிரித் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

தோல் பதனிடுதல், உணவுப் பதப்படுத்துதல், புதிய மருந்துகள் தயாரித்தல், சிறந்த பண்புகளுடனான ஆடை தயாரிப்புக்கான நூலிழைகள் உருவாக்குதல் என்று பல்வேறு தொழில்துறைகளிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுகிறது. இதுபோல் சட்டம் சார்ந்த தடயவியல் துறை, மரபணுச் சோதனை ஆகியவற்றிலும் இத்தொழில்நுட்பம் உதவுகிறது.

உயிரித் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. எனவே உயிரித் தொழில்நுட்பம் தொடர்புடைய படிப்பு படித்தவர்களுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கைநிறைய சம்பளம் கிடைக்கும். எனவே உயிரித் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு ஷ்யூர் வேலைவாய்ப்பு உண்டு.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.