Breaking News
மக்கள் பொறுமை காக்க மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வேண்டுகோள்

ஏடிஎம் மையங்கள் முழுமையாக செயல்பட 3 வாரங்கள் ஆகும். அதுவரை பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார். இந்த உத்தரவு அன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அடுத்த நாள் புதன்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. புதன், வியாழக்கிழமைகளில் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டன.

கடந்த வியாழக்கிழமை முதல் வங்கிகள், அஞ்சலகங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு நபருக்கு ரூ.4,000 மாற்றிக் கொடுக்கப்படுகிறது. வங்கிக் கணக்கில் இருந்து காசோலை, செலான் மூலம் ரூ.10,000 வரை எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

மக்களின் நலன் கருதி சனி, ஞாயிறும் வங்கிகள், அஞ்சலகங்கள் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி நேற்று வங்கிகள் செயல்பட்டன. விடுமுறை நாள் என்பதால் வங்கிகளின் முன்பு நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து நின்றனர். ஏடிஎம் இயந்திரங் களில் நாளொன்றுக்கு ரூ.2,000 எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை நிரப்ப இயந்திரங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டியி ருப்பதால் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் நேற்றும் செயல் படவில்லை.

மக்கள் அதிருப்தி

இதனால் அவசர தேவை களைகூட சமாளிக்க முடியாமல் பணத் தட்டுப்பாட்டினால் பொது மக்கள் பரிதவித்து வருகின்றனர். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நாடு முழுவதும் மக்கள் மத்தியில் அதிருப்தி அலை பரவி வருகிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் அமைச்சர் அருண் ஜேட்லி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறி யதாவது:

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை ஏற்று வங்கிகளில் பல மணி நேரம் காத்திருந்து புதிய ரூபாய் நோட்டு களை பொதுமக்கள் பெற்றுச் செல் கின்றனர். வங்கி அலுவலர்கள் காலை முதல் இரவு வரை அயராது பணியாற்றி வருகின்றனர். மக்களுக் கும் வங்கி ஊழியர்களுக்கும் நன்றி, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய வடிவிலான 2,000, 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் நிரப்ப சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. அதற்கு 3 வாரங்கள் ஆகலாம். அதன்பிறகு நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் ஏடிஎம்கள் முழுமையாக செயல் படத் தொடங்கும். அதுவரை மக்கள் பொறுமை காக்க வேண்டும்.

அரசின் அறிவிப்பால் ரூ.14 லட்சம் கோடி மதிப்புள்ள 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை ஆகியுள்ளன. அவற்றை மாற்ற தேவையான ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்துள்ளது. பணப்புழக்கம் சீரடைகிறதா என்பதை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

கையில் போதுமான பணம் கையிருப்பு உள்ளவர்கள், கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் அவசரப்பட்டு வங்கிக்கு செல்ல வேண்டாம். பழைய ரூபாய் நோட்டு களை மாற்ற டிசம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. சில நாட்கள் காத்திருந்து பொறுமை யாக வங்கிக்கு செல்லலாம். பணத் துக்குப் பதிலாக கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்த மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் வங்கிகளில் குறிப்பிட்ட வகை ரூபாய் நோட்டுகளை தர வேண்டும் என்று வாக்குவாதம் செய்ய வேண்டாம். வங்கி அலுவலர்கள் அளிக்கும் நோட்டுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

சனிக்கிழமை மதியம் வரை வங்கிகளில் ரூ.2 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்டேட் வங்கியில் மட்டும் ரூ.47,868 கோடி டெபாசிட் பெறப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்குரிய வங்கிக் கணக்குகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக தங்க நகை வியாபாரிகள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்று வதை உன்னிப்பாகக் கண்காணிக் கிறோம். இப்போதைக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் விடப்படும். 1,000 ரூபாய் உள்ளிட்ட இதர நோட்டுகள் பின்னர் புழக்கத்துக்கு வரும். 2,000 ரூபாய் நோட்டுகளில் ஜிபிஎஸ் சிப் இருப்பதாக வெளியான தகவல்கள் வதந்தி. அந்தத் தகவல்களை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.