Breaking News
மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறலாம்: பெட்ரோலிய நிறுவனங்கள் பரிசீலனை

மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகளில் தினசரி மாற்றம் கொண்டு வரும் நடைமுறையை பெட்ரோலிய நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கேற்ப தினசரி அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் ஏற்படும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நகரங்களில் இந்த நடைமுறையை முதற்கட்டமாக மே 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி பிறகு படிப்படியாக நாடு முழுதும் அமல்படுத்தவுள்ளது.

இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் பி.அசோக் பிடிஐ-யிடம் தெரிவிக்கும் போது, “சந்தை தொடர்பான விலைகளை தினசரி அடிப்படையில் நாடு முழுதும் மாற்றம் கொண்டு வர முடிவெடுத்துள்ளோம்” என்றார்.

இதனடிப்படையில் சோதனை முயற்சியாக பெட்ரோல், டீசல் விலைகள் தினசரி மாற்றும் திட்டம் முதன் முதலாக புதுச்சேரி, விசாகப்பட்டணம், ஆந்திரா, ராஜஸ்தானின் உதய்பூர், ஜார்கண்டில் ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் அமல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது சர்வதேச விலைகள் அடிப்படையில் அமெரிக்க டாலர்-ரூபாய் மதிப்புகளில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தினமும் பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் செய்யும் திட்டம் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

“தினமும் விலைகளை மாற்றம் செய்வது சாத்தியமாகக் கூடியதுதான் ஆனால் முதலில் சோதனையாக சில நகரங்களில் இதனை நடைமுறைப்படுத்துவோம் பிறகு இதன் விளைவுகளை ஆராய்ந்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் நீட்டிப்போம்” என்று கூறினார் அசோக்.

இத்திட்டத்தின் சோதனை நடைமுறையாக்கம் மே 1-ம் தேதி முதல் தொடங்கும் என்று பெட்ரோல் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படுவதால் விலை கொஞ்சம் கூடுதலாக உயர்வதையும், அதே போல் கூடுதல் விலை குறைவையும் தவிர்த்து ஒரு சமச்சீரான ஒரு விலை மாற்றத்தைக் கொண்டு வரும் முனைப்புடன் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் கைக்கு மாற்றப்பட்டாலும், அரசியல் காரணிகளும் இதில் தாக்கம் செலுத்தி வருகின்றன.

அரசியல் அழுத்தங்கள் காரணமாக சில வேளைகளில் பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் செய்யப்படாமல் விட்டு விடுவதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பெட்ரோல் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது இரண்டரை மாதங்களுக்கு பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.அதன் பிறகு முதலில் விலை உயர்த்தப்பட்டது, பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.91-ம் குறைக்கப்பட்டது.

எனவே அரசியல் காரணங்களுக்காக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட முடியாத நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக பெட்ரோல் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யும் சோதனை முயற்சியில் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.