Breaking News
வெற்றிப்பாதைக்கு திரும்புமா சன் ரைசர்ஸ் ஹைதராபாத்?- பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்தில் இன்று நடக்கும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது. கடந்த 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த ஹைதராபாத் அணி, இப்போட்டியின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் உத்வேகத்துடன் உள்ளது.

2 தோல்விகள்

இந்த ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதல் 2 போட்டிகளில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளை வென்றது. ஆனால் அதன் பிறகு மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் அந்த அணி இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆடவுள்ளது. தங்கள் சொந்த மண்ணில் நடக்கும் இப்போட்டியில் வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.

சன் ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை அதன் மிகப்பெரிய பலம் என்று பந்துவீச்சைக் கூறலாம். புவனேஷ் குமார், ரஷித் கான், ஆசிஷ் நெஹ்ரா, முஸ்டாபிசுர் ரஹ்மான், ஆகிய மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் அந்த அணியில் உள்ளனர். ஆனால் கடந்த 2 போட்டிகளாக அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாதது அந்த அணியை கவலைகொள்ளச் செய்கிறது.

பேட்டிங் வரிசை

அதே நேரத்தில் பஞ்சாப் அணியின் மிகப்பெரிய பலமாக அதன் பேட்டிங் வரிசை கருதப் படுகிறது. ஆம்லா, மேக்ஸ்வெல், மில்லர், மோர்கன் ஆகிய 4 வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளனர். மொத்தத்தில் சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கும், பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலான மோதலாக இன்றைய போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.

கொல்கத்தா – டெல்லி மோதல்

டெல்லியில் இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மோதுகிறது. 4 போட்டிகளில் ஆடி 6 புள்ளிகளைப் பெற்றுள்ள கொல்கத்தா அணி, இன்றைய போட்டியிலும் வென்று புள்ளிப்பட்டியலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஆவலில் உள்ளது. கொல்கத்தா அணியின் கேப்டனான கவுதம் காம்பீர், தொடர்ந்து சிறப்பாக ஆடிவருவது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.

அவருக்கு தோள்கொடுக்கும் விதத்தில் உத்தப்பா, மணிஷ் பாண்டே, யூசுப் பதான் ஆகியோர் ஆடும் பட்சத்தில், அது டெல்லி அணிக்கு கூடுதல் நெருக்கடியைக் கொடுக்கக்கூடும். பேட்டிங்கைப் போலவே பந்துவீச்சிலும் அந்த அணி வலுவாக உள்ளது. குறிப்பாக குல்தீப் யாதவ், சுனில் நரைன், பதான் ஆகியோரின் சுழற்பந்து வீச்சு டெல்லி அணிக்கு கடும் சவாலாக விளங்கக்கூடும்.

அதே நேரத்தில் முதல் போட்டியில் தோற்றபோதிலும் புனே மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அடுத்தடுத்து வென்றது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், சாம் பில்லிங்ஸ், கோரே ஆண்டர்சன் ஆகியோரைக்கொண்ட டெல்லி யின் பேட்டிங் வரிசை, கொல்கத்தா பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலாக இருக்கக்கூடும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.