Breaking News
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு பொதுமுறை மாலுமி பயிற்சி!

பயிற்சி

தமிழ்நாடு அரசின் தன்னாட்சி நிறுவனமான தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனம் (Tamilnadu Maritime Academy) பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆறு மாத கால அளவிலான பொதுமுறை மாலுமி பயிற்சியினை (Pre-Sea Course for General Purpose Rating) அளித்துவருகிறது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய அரசின் கப்பல் வணிகத்திற்கான பொது இயக்குநரகம் (Directorate General of Shipping) அங்கீகரித்துள்ள ஆறு மாத கால அளவிலான இருப்பிடப் பயிற்சிக்குத் (Residential Course) திருமணமாகாத ஆண்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

* கல்வித்தகுதி

ஆங்கில வழியில் அளிக்கப்படும் இப்பயிற்சிக்குப் பின்வரும் கல்வித்தகுதிகள் இருந்தால் போதும்.பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களை எடுத்துப் படித்திருப்பதுடன் 40% மதிப்பெண்களுக்குக் குறையாமல் எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது)பன்னிரண்டாம் வகுப்பில் ஏதாவதொரு பிரிவில் மொத்தம் 40% மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் குறைந்தது 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும், (அல்லது)தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) இரண்டு வருட கால அளவிலான ஏதாவதொரு பயிற்சியினை முடித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிற்பயிற்சிக்கான இறுதியாண்டுத் தேர்வில் மொத்தம் 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பத்து அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் 40% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.

* வயது வரம்பு

பயிற்சியில் சேர்பவர்களுக்கு 1.7.2017 அன்று 17½ வயதுக்குக் குறையாமலும், 25 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு உண்டு. வயதினை உறுதிப்படுத்திடப் பிறப்புப் பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் நகல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். மேலும், பாஸ்போர்ட் பெற்றிருப்பதுடன் அதன் நகலும் இணைக்கப்பட வேண்டும்.

* மருத்துவத் தகுதி

இப்பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் வணிகக் கப்பல் சட்டம் – 2000 குறிப்பிடும் கடல் பணியாளர்களுக்கான மருத்துவத் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, இப்பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்ணாடி அணிந்திருக்கக் கூடாது. நிறப் பார்வைக் குறைபாடுடையவர்களாக இருக்கக் கூடாது. கண்களில் எந்தவிதமான குறைபாடுகளுமில்லாமல் இருக்க வேண்டும்.

* பயிற்சிக் கட்டணம்

மாணவர் சேர்க்கையின்போது பயிற்சிக் கட்டணமாக ரூ.1,50,000 ஒரே தவணையில் செலுத்த வேண்டும்.

*பயிற்சியின் சிறப்புகள்

இந்தப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தூத்துக்குடியிலுள்ள கடல்சார் பயிற்சி நிறுவனத்தில் கருத்தியல் வகுப்புகளும், தூத்துக்குடி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனப் பணிமனையில் (Poompuhar Shipping Corporation Marine Workshop) தொழிற்பயிற்சிகளும் அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மும்பையிலுள்ள கப்பல் வணிகத்திற்கான பொது இயக்குநரகத்தின் (Directorate General of Shipping) கீழ் இயங்கும் கடற்பணிகளுக்கான தேர்வு வாரியம் (Board of Examinations for Seafarers) நடத்துகிறது. இந்த அகில இந்தியப் பொதுநோக்க மதிப்பீட்டுப் பயிற்சிக்கான வெளியேற்றப் பயிற்சித் (All India Exit Examination for General Purpose Rating Course) தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைப் பயிற்சி நிறுவனமே செய்து தருகிறது.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ச்சியான வெளியேற்றச் சான்றிதழ் (Continuous Discharge Certificate – CDC) எனும் தகுதிச் சான்றிதழையும் பெற முடியும். இந்தச் சான்றிதழைக் கொண்டு கடல் வழியைப் பயன்படுத்திச் செயல்படும் வணிகக் கடற்படைப் பணிகளை எளிதில் பெற முடியும். இந்தப் பயிற்சி நிறுவனம், இந்தியத் தேசிய கடற்பணியாளர் தரவுதள எண் மற்றும் தொடர்ச்சியான வெளியேற்றச் சான்றிதழ் (Indian National Database of Seafarers (INDOs) Number and CDC) பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரும். இதற்காகத் தனியாகக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

இந்தப் பயிற்சி நிறைவுக்குப் பின் 36 மாதங்கள் கடல் சார் பணியில் அனுபவம் பெற்ற பின்பு வெளிநாடு செல்லும் கப்பலில் இரண்டாம் துணைப் பணியாளர் எனும் அலுவலர் நிலைக்கான தேர்வுகளை எழுத முடியும். வெளிநாட்டுக் கப்பல்களில் பணிபுரியும் வாய்ப்பையும் பெற முடியும்.

* விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tn.gov.in\\tnma எனும் இணையதளத்திலிருக்கும் விண்ணப்பபடிவத்தைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணமாக ”Tamil Nadu Maritime Academy” எனும் பெயரில் தூத்துக்குடியில் மாற்றிக்கொள்ளக்கூடியதாக ரூ.750-க்கான டி.டி. பெற்று இணைத்து, அஞ்சல் உறையின் மேல் “Application for admission to GPR Course to be commenced from 01.07.2017” என்று குறிப்பிட்டு, “Director, Tamil Nadu Maritime Academy, 333, South Beach Road, Thoothukudi – 628001, Tamil Nadu” எனும் முகவரிக்கு 20.4.2017 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

* மாணவர் தேர்வு

இப்பயிற்சிக்குத் தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு அடிப்படையில், பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றைக் கொண்டு பயிற்சிக்கான 40 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தூத்துக்குடியில் நடைபெறும் எழுத்துத் தேர்வுக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குத் தனியாக அழைப்புகள் அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர், பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 1.7.2017 முதல் பயிற்சிகள் தொடங்கும்.

மேலும் கூடுதல் தகவல்களைப் பெற, மேற்காணும் இணையதளத்திலிருந்து இப்பயிற்சிக்கான தகவல் குறிப்பேட்டினைத் தரவிறக்கம் செய்து பார்க்கலாம் அல்லது “Director, Tamil Nadu Maritime Academy, 333, South Beach Road, Thoothukudi- 628001, Tamil Nadu” எனும் முகவரிக்கு நேரில் சென்று தெரிந்துகொள்ளலாம். tnma1998@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது தூத்துக்குடியிலுள்ள கடல்சார் பயிற்சி நிறுவன அலுவலகத்தின் 0461 – 2320075, 2320076, 2330076 எனும் தொலைபேசி எண்களிலோ தொடர்புகொண்டும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.