Breaking News
பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகள் தளர்வு மத்திய மந்திரி வி.கே.சிங் தகவல்

பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.கே.சிங் தெரிவித்தார்.

வி.கே.சிங் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விதிமுறைகள் தளர்வு

பாஸ்போர்ட் வழங்குவதில் உள்ள சில நடைமுறைகளை கொள்கை ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் எளிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இருப்பதன் மூலம் திருநங்கைகள், தாய் அல்லது தந்தை ஆகிய ஒருவரால் மட்டும் வளர்க்கப்படும் குழந்தைகள், சன்னியாசிகள் உள்ளிட்டோர் பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.

பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பான விதிமுறைகள் பற்றி ஆய்வு செய்வதற்காக வெளியுறவு, பெண்கள் மற்றும் குடும்பநலம் ஆகிய அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் 3 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. பாஸ்போர்ட்டில் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டாம் என்று சில குழந்தைகள் தரப்பில் விண்ணப்பப் படிவத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த குழு ஆய்வு செய்தது. தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவரால் வளர்க்கப்படும் குழந்தைகள், தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு பாஸ்போர்ட் வழங்கும் போது தந்தையின் பெயரை குறிப்பிடுவது தொடர்பாக எழுந்த பிரச்சினை குறித்தும் இந்த குழு பரிசீலித்தது.

பாதுகாவலர்

இந்த குழு வழங்கியுள்ள சிபாரிசுகளின்படி சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. அதன்படி ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தாய் அல்லது தந்தை அல்லது சட்டரீதியிலான பாதுகாவலர் ஆகியோரில் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது ஆகும். இதன்மூலம் தாயிடமோ அல்லது தந்தையிடமோ வளரும் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பது எளிதாகும்.

திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப படிவத்துடன் ‘இணைப்பு படிவம்-ஜி’யையும் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும்.

சன்னியாசிகள்

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்ப படிவத்தில் தங்கள் பெற்றோர் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை என்றும், அதற்கு பதிலாக தங்கள் குருவின் பெயரை குறிப்பிட விரும்புவதாகவும், இதற்கு அனுமதி வழங்க வேண்டும் சன்னியாசிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளது. விண்ணப்பத்துடன் சன்னியாசிகள் தாக்கல் செய்யும் வாக்காளர் அடையாள அட்டை, வருமான வரி கணக்கு எண் கட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றில் பெற்றோரின் பெயருக்கு பதிலாக அந்த சன்னியாசிகளின் குருவின் பெயர் இடம்பெற்று இருக்க வேண்டும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.