Breaking News
மதுரைக்குப் போய் இதை பார்க்காமல் இருக்காதீர்கள்!

யானைமலை மதுரை அருகே அமைந்திருக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மலை மற்றும் சுற்றுலா தலமாகும். யானை மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, 1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்டது. சற்று தொலைவில் இருந்து பார்க்கும் போது இம்மலை ஒரு யானையின் தோற்றத்தை பிரதிபலிப்பதால் இதற்கு யானைமலை என்ற பெயர் வந்தது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கிறது.

யானைமலை மலையேற்றப் ப்ரியர்களுக்கு மிகவும் உகந்த இடம்; இதனால் பல இளைஞர்கள் மலையேற்றத்திற்காகவே யானைமலைக்கு வருகின்றனர். ஆனால், வெறும் மலையேற்றத்திற்கு மட்டும் யானைமலை பெயர் பெற்றதல்ல; இதைத்தவிர, சமணர் கல்படுக்கைகள், குடைவரை கோயில்களான – நரசிங்கபெருமாள் குடைவரை கோவில், முருகன் பெருமான் குடைவரை கோவில் ஆகியன உள்ளன.

யானைமலை, பாண்டியர் ஆட்சி காலத்தில், தமிழ் சமணர்கள் மத்தியில் ஒரு புனித ஸ்தலமாக விளங்கியது. பல சமண துறவிகள், பாண்டியர் ஆட்சி காலத்தில் இங்கு வாழ்ந்து வந்தனர். மலையின் உச்சியில் உள்ள குகைகளில் புகழ்பெற்ற சமண துறவிகளான மகாவீரர், கோமதேஷ்வரர் மற்றும் பிற தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சமண துறவிகள் ஓய்வெடுப்பதற்கு இங்கு பல கல் படுக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. தமிழ்-பிராமிய மற்றும் வட்டெழுத்துக்களின் பதிவுகளை இங்கு காணலாம்.

மலையின் அடிவாரத்தில் இரண்டு இந்துக் கோவில்களும் இருக்கின்றன; லாடன் கோவில் – இங்கு முக்கிய கடவுள் முருகன். இன்னொன்று : யோக நரசிம்ம கோவில்; விஷ்ணுவிற்கான கோவில். இரண்டுமே பாறைகளை குடைந்து கட்டப்பட்ட கோவில்கள். 8’ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்டது.

நரசிங்கபெருமாள் குடைவரை கோவில்

கி.பி. 770 ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட‌ பராந்தக நெடுஞ்சடையன் எனும் பாண்டிய மன்னன் காலத்தில் மாறன்காரி கலிக்குடா வைத்தியன் என்பவர் பாண்டிய மன்னனுடைய மந்திரியாக இருந்தார். இவர் யானை மலைக்கு வட மேற்கே, நரசிங்கப் பெருமாளுக்கு, குடை வரை கோவில் ஒன்றை கட்ட தீர்மானித்து, ஆரம்ப‌ வேலைகளை தொடங்கினார். ஆனால், கோவில் முடியும் தருவாயில் இவர் நோய்வாய் பட்டு இறந்துபோகவே, இவருடைய தம்பி பாண்டா மங்கல விசைய அதையன் இக்கோவில் திருப்பணியை செய்து குடமுழுக்கும் செய்தார் என இங்கு இருக்கும் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இதனை தொடர்ந்து, யானைமலையை நரசிங்கமங்கலம் என்று அழைத்தனர்.

இக் குடைவரைக் கோயிலில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் முற்காலப் பாண்டியர், சோழர், சோழ பாண்டியர், பிற்காலப் பாண்டியர், விஜயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் பல இக்கோயிலுக்குச் செய்திருக்கின்றனர் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது.

முருகன் பெருமான் குடைவரை கோவில்

யானைமலையில் முருகனுக்கும் குடை வரை கோவில் உள்ளது. இங்கு காணப்படும் தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு கி.பி.எட்டாம் நூற்றாண்டை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இக்கல்வெட்டில் ”நம்பிரான் பட்டசோமாசி பரிவிராஜகர்” என்பவர் வட்டகுறிச்சி என்ற ஊரை சேர்ந்தவர் இக்குடைவரை கோயிலை புதுப்பித்ததாக கூறுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.