பிடித்தமான படிப்பைத் தேர்ந்தெடுங்கள்

0

பிளஸ் 2-க்குப் பிறகு கல்லூரியில் சேர்வதற்கு முன் எதையெல்லாம் பரிசீலித்தாக வேண்டும்? உயர்கல்வியைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோர்- குழந்தைகள் மத்தியில் உருப்படியான முடிவை எடுப்பது எப்படி? இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு விடை காண உதவுகிறார் திருச்சி மாணவர் மனநல ஆலோசகர் பி. பிரதீபா.

ஒருவரின் திறமை எது, விருப்பம் எது என்று பகுத்தறிந்து பார்ப்பதில், அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் இடையே குழப்பமிருக்கும். உதாரணமாக, பாடுவதில் நல்ல திறமை உள்ள மாணவர், தான் ஒரு சிறந்த பாடகனாக வரவேண்டுமென்பதை லட்சியமாக வைத்திருப்பார்.

ஆனால், அவருடைய எதிர்காலம் குறித்துப் பெற்றோருக்கு அதிகக் கவலை இருக்கும். கல்லூரியிலும் பாடும் திறமையைப் பறைசாற்ற மேடைகள் கிடைக்கும் என்பதால், ஆர்வமுள்ள பாடப் பிரிவில் அவர் கல்வியைத் தொடர ஏற்பாடு செய்யலாம். பிற்காலத்தில் அவரே தனது ஆர்வத்தையும் திறமையையும் ஒரு புள்ளியில் சேர்த்துப் பிரகாசிக்க வாய்ப்புண்டு. எனவே, மாணவரின் கனவுகளைச் சிதைக்காமல் அவருடைய எதிர்காலத்தை அமைக்க உதவ வேண்டும்.

பெரும்பாலான வீடுகளில், மருத்துவர் ஆக முடியாத அப்பா தனது விருப்பத்தைத் தனது குழந்தைகளிடம் திணிப்பதையோ, அல்லது தான் ஒரு மருத்துவர் என்பதாலேயே தனது மகனையோ, மகளையோ தொழில்முறை வாரிசாக்க முனைவதையோ பார்க்கலாம். அதில் அவர்கள் அளவில் நியாயமிருக்கலாம். ஆனால், அதற்காகக் குழந்தை களின் விருப்பங்களை உதா சீனம் செய்வது மொத்த நோக்கத் தையே பாழாக்கிவிடும். எனவே, முன்முடிவுகளை ஒதுக்கிவிட்டுக் குடும்பத்தினர் உட்கார்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.

இதற்கு முதலில் பெற் றோர் தனியாகவும் குழந்தைகள் தனியாகவும் இந்தச் செயல் பாட்டை மேற்கொள்ளலாம். சேர வேண்டிய கல்லூரி, பாடப் பிரிவு, சேருபவரின் ஆர்வம், திறமை குறித்து சாதக, பாதக அம்சங்களைப் பட்டியலிட்டு எழுத வேண்டும். பின்னர், அதை மையமாகக் கொண்டு உருப்படியான ஒரு பொது முடிவுக்கு வரலாம். மாறாக, இருதரப்பும் ஒருவரையொருவர் தன்விருப்பத்துக்கு மாற்ற வேண்டும் என்று முன்தீர்மானத்துடன் அமர்ந்தால் குழப்பம்தான் மிஞ்சும்.

ஒருமித்த முடிவு சாத்தியமா?

மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோர் மத்தியிலும் சரியான கல்லூரி மற்றும் படிப்பைத் தேர்ந் தெடுப்பதில் போதிய தரவுகள் இருந்தும், தெளிவில்லாமல் தடு மாறுவார்கள். இரு தரப்பினருமே தமது தனிப்பட்ட விருப்பங்கள், தங்களுடைய நண்பர்களின் திணிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இது போதாதென்று கல்லூரிகளின் கவர்ச்சிகரமான விளம்பர வலையில் சிக்குபவர்கள் அதிகம்.

இந்த நிலையில் முடிவுகளை எட்டுவதில் இழுபறி நீடித்தால் துறை சார்ந்த வல்லுநரின் ஆலோசனையை நாடலாம். அதேபோலக் குறிப்பிட்ட பாடப் பிரிவில் மாணவரின் ஈடுபாடு, படிப்பை முடிக்கும்போது அதன் எதிர்காலம் ஆகியவற்றை அந்தத் துறையில் இருப்பவர் மூலமாக அறியலாம்.

இதன்பிறகு எடுக்கப்படும் முடிவு மாணவரின் மேற்கல்விக்குச் சிறப்பான அடித்தளமாக அமையும்.

தீர்மானிக்கும் மதிப்பீடுகள்

குழந்தைகளின் எதிர் காலத்தைக் கணக்கிட்டு அவர் களுடைய நன்மைக்காக என்று பெற்றோர் எடுக்கும் முடிவுகளைக் குறைசொல்வதற்கில்லை. ஆனால் விருப்பமில்லாத படிப்பை மேற்கொள்பவரின் மன அழுத் தங்கள், பின்னாளில் கல்லூரிச் சூழலில் மேலும் இறுக்கத்தை ஏற்படுத்தும். பள்ளியில் பிரகாசித்தவர்கள் கல்லூரியில் சோபிக்காததற்கும் இன்ன பிற பிரச்சினைகளை இழுத்துப் போட்டுக் கொள்வதற்கும் பின்னணி இதுதான்.

எனவே, எதிர்காலத்துக்கு வலுச் சேர்க்கும் கல்லூரிப் படிப்புடன், மாணவர்களின் திறமையை பளிச்சிட வைக்கவும், இணையான கூடுதல் வாய்ப்புகளைத் தரலாம். உதாரணத்துக்குப் பொறியியல் மாணவன் தனது கனவான ஒளிப்படக்கலை குறித்துப் பகுதி நேரமாகப் படிக்கவோ, வாரத்தில் சில மணி நேரம் கேமராவோடு சுற்றவோ அனுமதிப்பதில் தவறில்லை.

இந்த வகையில் ஒரு பொது முடிவுக்காகத் தனது குழந்தைகளுடன் சமரசம் செய்து கொள்வதும், அவற்றுக்கு இப் போதே உத்திரவாதம் அளிப்ப தும் சிறப்பான பலனைத் தரும். இன்னும் சில பெற்றோர் குழந்தை களின் புதுமையான படிப்பு ஆசைக்கு உடன்பட்டாலும், ஊரையும் உறவையும் நினைத்து தயங்குவார்கள். அவர்களுக்கு சுயபரிசோதனை அவசியம். ஏனெனில் மேற்படிப்பு, வேலை, வருமானம் என்பதெல்லாம் அர்த்தமுள்ளதாகவும் மன மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையின் மீதும் எழுப்பினால் மட்டுமே நீடித்திருக்கும்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.