Breaking News
பாபர் மசூதி இடிப்பு: அத்வானி மீதான வழக்கு விசாரணை இன்று மீண்டும் தொடங்குகிறது

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு டிசம்பர் 6–ந் தேதி இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கரசேவகர்களுக்கு எதிராக லக்னோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் குற்றச்சதியில் ஈடுபட்டதாக பா.ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, முன்னாள் உத்தரபிரதேச முதல்–மந்திரியும், ராஜஸ்தான் மாநில கவர்னருமான கல்யாண் சிங் உள்ளிட்ட 13 பேர் மீது ரேபரேலி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டோரை கடந்த 2001–ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டு விடுவித்தது.

2 ஆண்டுக்குள் தீர்ப்பு
இதை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் ஒரு சம்பவத்தில் இருவேறு கோர்ட்டுகளில் விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கையும் லக்னோ சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி கடந்த மாதம் 19–ந் தேதி உத்தரவிட்டது.

அத்துடன் இந்த வழக்கில் ஒரு மாதத்துக்குள் விசாரணையை தொடங்கி 2 ஆண்டுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக இந்த வழக்கை தினந்தோறும் விசாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. அதன்படி அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கு விசாரணை லக்னோ சிறப்பு கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

5 பேர் சரண்
முன்னதாக இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் எம்.பி. ராம் விலாஸ் வேதாந்தி, விசுவ இந்து பரி‌ஷத் தலைவர்கள் கண்பத் ராய், வைகுந்த் லால் சர்மா உள்ளிட்ட 5 தலைவர்கள் நேற்று முன்தினம் லக்னோ கோர்ட்டில் சரணடைந்தனர். உடனடியாக அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதைப்போல அத்வானி உள்ளிட்ட தலைவர்களும் இந்த கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தொடர்புடைய கல்யாண் சிங் தற்போது கவர்னராக இருப்பதால், அவர் அந்த பதவியில் இருந்து விலகியவுடன் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.