Breaking News
சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றி: சதுரங்க ரேட்டிங் பட்டியலில் அரசு பள்ளி மாணவி

சர்வதேச சதுரங்க போட்டியில் வென்று சதுரங்க ரேட்டிங் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் மதுரை அரசு பள்ளி மாணவி காயத்ரி.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிராமம் அ.செட்டியார்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த ஓட்டுநர் மனிமாறன் மகள் காயத்ரி. அ.வெள்ளாளப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 7-ம் வகுப்புக்கு செல்ல உள்ளார். 5-ம் வகுப்பு வரை அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்றார்.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் விளையாட்டுகளில் 2012-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டும் சேர்க்கப்பட்டது. அப்போது செட்டியார்பட்டி பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இடைநிலை ஆசிரியர் செந்தில்குமார் சதுரங்க விளையாட்டு பயிற்சி அளிக்க தொடங்கினார்.

விடுமுறை நாட்களில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் காயத்ரி சிறப்பாக விளையாடினர். இதையடுத்து வெளியிடங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். ஒன்றியம், கல்வி மாவட்டம், மண்டல அளவு போட்டிகளில் வென்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வானார்.

இந்நிலையில் ஆறாம் வகுப்புக் காக வேறு அரசுப்பள்ளிக்கு மாற வேண்டிய சூழல் காயத்ரிக்கு உருவானது. வேறு பள்ளியில் சேர்ந்தாலும் சதுரங்கத்தின் மீதான ஆர்வம் குறையவில்லை. ஆனால் சரியான பயிற்சியாளர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அவருக்கு ஏற்கெனவே பயிற்சி அளித்த ஆசிரியர் செந்தில்குமார், வேறு பள்ளி மாணவியாக இருந்தாலும் பிளஸ் 2 வரை காயத்ரிக்கு இலவசமாக பயிற்சி அளிக்க முன்வந்தார்.

காயத்ரி இதுவரை 50 போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளார். கோவை, ஈரோடு, விருதுநகரில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பங்கேற்று பரிசு, பதக்கம் பெற்றுள்ளார். இப்போட்டிகளில் வென்றதால் சதுரங்க ரேட்டிங் பட்டியலில் காயத்ரி இடம் பெற்றுள்ளார்.

காயத்ரியின் பயிற்சியாளர் வி.செந்தில்குமார் ‘தி இந்து’-விடம் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் விளையாட்டு பயிற்சி பெற ஏராளமான மாணவ, மாணவிகள் முன்வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறந்த வீரர்கள். வறுமையால் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லாமல் பள்ளியுடன் விளையாட்டு ஆர்வத்துக்கு விடை கொடுத்துவிடுகின்றனர்.

சதுரங்கத்தை பொறுத்தவரை ஒரு போட்டிக்கு நுழைவு கட்டணம் உட்பட ரூ.3000 முதல் ரூ.5000 வரை செலவாகிறது. வேலைக்கு போனால் தான் வீட்டில் சமையல் நடக்கும் என்ற நிலையில் வாழும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை பொறுத்தவரை இந்த தொகை செலவிட முடியாத தொகையாகும்.

இதனால் ஆர்வம், திறமை இருந்தும் விளையாட்டில் ஜொலிக்க முடியாமல் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தவிக்கின்றனர். எனவே விளை யாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெறும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அடுத்தடுத்த கட்டங் களுக்கு செல்ல அரசு சார்பில் ஊக்கத் தொகை மற்றும் உதவிகள் வழங்கினால் விளையாட்டில் எண்ணற்ற இளைஞர்களை உருவாக்க முடியும்.

காயத்ரி நன்றாக சதுரங்கம் விளையாடுவார். சிறந்த சதுரங்க வீராங்கனையாக வர வேண்டும் என அவரும், பெற்றோரும் விரும்புகின்றனர். அதற்காக கடுமையாக பயிற்சி பெற்று வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.