Breaking News
பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் சென்னையில் 4 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க ஏற்பாடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையிலான 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பயணிகள் வசதிக்காக சென்னையில் 4 தற்காலிக பஸ் நிலையங்களும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

சிறப்பு பஸ்கள்

பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு செல்ல தினமும் இயக்கப்படும் 2 ஆயிரத்து 275 பஸ்களுடன், கூடுதலாக 11-ந்தேதியன்று 794 சிறப்பு பஸ்களும், 12-ந்தேதியன்று 1,779 சிறப்பு பஸ்களும், 13-ந்தேதியன்று 1,872 சிறப்பு பஸ்களும் என 3 நாட்களில் மொத்தம் 4 ஆயிரத்து 445 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். ஆக ஒட்டுமொத்தமாக 3 நாட்களிலும் சேர்த்து 11 ஆயிரத்து 270 பஸ்கள் இயக்கப்படும்.

மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களிலிருந்து 11-ந்தேதி 991 பஸ்களும், 12-ந்தேதி 2,291 பஸ்களும், 13-ந்தேதி 3,141 பஸ்களும் என 3 நாட்களில் 6 ஆயிரத்து 423 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ளவும், அதுதொடர்பான புகார் தெரிவிப்பதற்கும் 044-24794709 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

சென்னையில்

கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தன்று சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பயணிகளின் எளிதான பயணத்துக்கு ஏதுவாகவும் பஸ்கள் புறப்படும் இடங்கள் மாற்றியமைக்கப்பட்டது. இந்த திட்டம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

அதுபோலவே, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து, வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையிலான 3 நாட்களில் பயணிகள் ஏறும் இடங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு ஏற்ப, தங்கள் பயணத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் விவரம் வருமாறு:-

வெளியூர் பஸ் நிலையங்கள்

* செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பஸ்கள், அண்ணாநகரில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பஸ் இருந்து புறப்படும்.

* கிழக்கு கடற்கரை சாலை வழியாக (ஈ.சி.ஆர்.) புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பஸ்கள், அடையாறு காந்திநகரில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

* திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சை மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பஸ்களும் (எஸ்.இ.டி.சி. உள்பட), தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் (மெப்ஸ்) இருந்து புறப்படும்.

* பூந்தமல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

தற்காலிக பஸ் நிலையங்கள்

மேற்கண்ட 4 தடப்பகுதிகளில் செல்லும் பஸ்களுக்கு 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையிலான 3 நாட்களில் கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் வகையில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களில் சென்று பயணம் மேற்கொள்ளலாம்.

இத்தடப் பகுதிகளில் பயணம் செய்ய உள்ள பிற பயணிகளும் அந்தந்த மாற்றியமைக்கப்பட்ட பஸ்கள் புறப்படும் இடங்களுக்கு சென்று பயணம் செய்யலாம்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், சேலம், கோவை, எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வழக்கம் போல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

இணைப்பு பஸ்கள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பஸ்கள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச்சாலை வழியாக வண்டலூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பஸ் நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பாக முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தம் சென்று, தாங்கள் முன்பதிவு செய்த நேரத்துக்கு பஸ்களில் பயணம் மேற்கொள்ளலாம்.

மேற்கண்ட 3 நாட்களும் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுக்குன்றம்-செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம். அனைத்து பஸ் நிலையங்களுக்கும் இணைப்பு பஸ்கள் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும்.

மேற்கண்ட தகவல்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.