Breaking News
தாய்லாந்து பாட்மிண்டன் இன்று தொடக்கம்: சாய்னா, சாய் பிரணீத் மீது எதிர்பார்ப்பு

தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மிண்டன் தொடர் பாங்காக்கில் இன்று தகுதி சுற்று ஆட்டங்களுடன் தொடங்கிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் இந்தியாவின் சாய்னா நெவால், சாய் பிரணீத் ஆகியோர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

சுதிர்மான் கோப்பையில் கலந்துகொள்ளாத நிலையில் சாய்னா இந்த தொடரில் களமிறங்குகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் கோப்பையை வென்ற சாய்னா மீண்டும் ஒரு முறை கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு தொடரில் பட்டம் வெல்லும் கனவுடன் உள்ளார்.

போட்டி தரவரிசையில் 2-வது இடம் வழங்கப்பட்டுள்ள சாய்னா தனது முதல் சுற்றில் தகுதி நிலை வீராங்கனையான சுலோவேக்கியாவின் மார்ட்டினா ரெபிஸ்காவுடன் மோதுகிறார். உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் சாய்னா, இந்த தொடரில் கால் இறுதி வரை முன்னேறுவதில் எந்தவித சிரமம் இருக்காது என கருதப்படுகிறது.

சாய்னா இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் முன்னாள் உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனக் இண்டனானை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. போட்டி தரவரிசையில் அவர் முதலிடம் வகிக்கிறார்.

ஆடவர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் மீது எதிர்பார்ப்பு உள்ளது. சிங்கப்பூர் ஓபனில் பட்டம் வென்ற அவர் சிறந்த திறனை வெளிப்படுத்தக்கூடும். சாய் பிரணீத் தனது முதல் சுற்றில் இந்தோனேஷியாவின் நதானியேல் எர்னஸ்டன் சுலிஸ்டோவுடன் மோதுகிறார்.

கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்ட குருசாய்தத் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்கிறார். காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், தனது முதல் சுற்றில் இந்தோனேஷியாவின் பான்ஜி அஹ்மத் மௌலானாவை சந்திக்கிறார்.

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மற்றொரு இந்திய வீரரான காஷ்யப், தனது முதல் சுற்றில் சுலோவேக்கியாவின் மிலன் டிராட்வாவுடன் மோதுகிறார். இவர்களுடன் இந்த தொடரில் சவுரப் வர்மா, பிரதுல் ஜோஷி, ஆதித்யா ஜோஷி, ஹர்ஷீல் தானி, ஜெய்ஸ்வால், ராகுல் யாதவ் ஆகியோரும் ஒற்றையர் பிரிவில் களமிறங்குகின்றனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரிதுஅபர்னா தாஸ், ருத்விகா ஷிவானி காடே, ரேஷ்மா கார்த்திக், சாய் உட்டேஜிதா ராவ் சுக்கா, ஷாய்லி ரானே, ஸ்ரீகிருஷ்ண பிரியா ஆகியோரும் விளையாடுகின்றனர். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜக்காம்புடி மேகனா, பூர்விஷா ஆகியோரும் ஆடவர் இரட்டையர் பிரிவில் அர்ஜூன்- ராமச்சந்திரன், பிரான்சிஸ் ஆல்வின் – கோனா தருண் ஆகியோரும் களமிறங்குகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.